உள்ளம் தேடி கல்வியைக் கொண்டுசெல்வோம்!

By ம.சுசித்ரா

“படிப்பு வரலை... பள்ளிக்கூடத்தில் எல்லோருடனும் அடிக்கடி அடிதடியில் இறங்கிவிடுகிறான். ஆசிரியர்களிடமும் எடுத்தெறிந்துப் பேசுகிறான். நடத்தைக் கோளாறு காரணமாக இவனுக்கு டீசி கொடுத்துப் பள்ளியைவிட்டு அனுப்பிவிட வேண்டியதுதான்...”

8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் குறித்து, மதுரையில் உள்ள பிரபல தனியார் பள்ளி நிர்வாகம், சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் முடிவெடுத்தது. அந்தச் சமயம், நாடக ஆசிரியர் செல்வம் அந்தப் பள்ளி ஆண்டுவிழாவுக்கு மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி கொடுக்க அழைக்கப்பட்டிருந்தார். ஒழுக்கக் கேடு என்று முத்திரை குத்தப்பட்ட அந்தச் சிறுவனுக்கு, நாடகக் கலை மூலம் அறம் கற்பிக்கும் பொறுப்பை ஏற்க செல்வம் முன்வந்தார்.

கலைஞர்களாக மாறிய மாணவர்கள்

ஆண்டுவிழாவில் தொடங்கிய பயிற்சி, சில மாதங்களுக்கு நீண்டது. நாடகக் கலை வழியாகப் பொறுமை, விட்டுக்கொடுத்தல், பாடத்தைக் கிரகித்தல் ஆகியவற்றில் புடம்போடப்பட்டான் அந்தச் சிறுவன். 3 மாதங்களில் வகுப்பின் முதல் மாணவனாகவும் ஒழுக்கசீலனாகவும் ஒளிரத் தொடங்கினான்.

கடந்த 15 ஆண்டுகளில் இதுபோன்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு, நாடகக் கலையின் வழியாக அன்பும் பண்பும் அறிவும் ஊட்டியுள்ளார் செல்வம். சில தமிழ்த் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார்.

குப்பையிலும் கலை வண்ணம்

அமெரிக்கா, கனடா, நார்வே, டென்மார்க், மலேசியா உள்ளிட்ட வெளிநாடு வாழ் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் தமிழ் மொழி பேச, எழுத கற்பித்துவருகிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஜான் பிரிட்டோ அகாடமி வழியாக, மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிக் குழந்தைகள் 500 பேருக்கு நாடகக் கலையை இணையவழி கற்பித்துவருகிறார். இதுதவிர ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தப்பட்டுவரும் ’தான்’ அறக்கட்டளை, 'சிடார்’ அறக்கட்டளை போன்ற தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து, ‘தியேட்டர் எஜுகேஷன்’ எனப்படும் நாடகக் கலை பாடத்திடத்தையும் வகுத்துள்ளார் செல்வம்.

குழந்தைகள், அதிலும் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளை நோக்கி தன்னை அழைத்துவந்தது தன்னுடைய குழந்தைப் பருவ அனுபவங்கள்தான் என்கிறார் செல்வம். மதுரை அரசரடி பகுதியில் அமைந்துள்ள மத்தியச் சிறை வளாகத்துக்கு அருகில் இவரது வீடு. அதனால் கைதிகளைச் சந்திக்க வரும் குடும்பத்தினர், அதிலும் சிறை வாசலில் கணவனைக் காண ஏக்கத்துடன் காத்திருக்கும் மனைவி, தந்தையை எதிர்பார்த்து நிற்கும் மகன் போன்ற மனிதர்களைக் கவனித்தபடியே வளர்ந்திருக்கிறார் செல்வம்.

மேடையோ, ஒப்பனையோ தேவையில்லை

“என்னுடைய அப்பா அய்யனார் சினிமா காதலர். எங்களுக்கெல்லாம் நல்லது, கெட்டதை அவர் திரைப்படங்கள் வழியாகவே ஊட்டினார். ஆசியாவிலேயே மிகப் பெரிய திரையரங்கமாக விளங்கிய மதுரை தங்கம் தியேட்டரில் அப்பாவுடன் ’பாசமலர்’, ‘பாகப்பிரிவினை’ போன்ற படங்களைப் பார்த்துப் பார்த்தே அண்ணன் - தங்கை பாசத்தையும், விட்டுக்கொடுக்கும் பண்பையும் உளமாறக் கற்றேன். அப்பா பிளஸ் 2-க்கு மேல் படிக்கவில்லை என்றாலும் எனக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊட்டினார்.

அண்ணா, காமராஜர், பெரியார், பிரபாகரன் போன்ற பேராளுமைகளின் வாழ்க்கைப் பக்கங்களை வாசிக்கும் ஆர்வத்தை அப்பா தான் எனக்குத் தூண்டினார். ஆனால், அவர் சைக்கிள் பஞ்சர் பார்க்கும் சிறுதொழில் செய்துவந்ததால் வறுமையில் வாடினோம். அத்தகைய சூழலில், அன்றாடம் 3 வேளை உணவளித்து என்னுடைய கல்விக்கும் உதவியது தமிழ்நாடு இறையியல் கல்லூரிதான். அங்கு அதிசிறந்த அன்பாசிரியர்கள் இருந்ததால், மேலும் வாசிப்பு ஆர்வம் வளர்ந்தது.

படிக்கும் காலத்தில் நிறைய சுற்றுலாப் பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். பயணங்கள் பரந்துபட்ட அனுபவங்களைத் தந்தன. பயணக் கட்டுரைகளின் வழி என் மொழி ஆளுமையும் வளர்ந்தது. ’பரட்டை’ என்கிற தியாபிலஸ் அப்பாவு எனும் நாடக ஆசிரியர், நாடகத்துக்கு மேடையோ ஒப்பனையோ தேவையில்லை; உரையாடல்தான் முக்கியம் என்று எனக்குப் புரியவைத்தார். இப்படி எத்தனையோ மனிதர்கள் என்னை அரவணைத்து, கல்வியையும் கலையையும் வாரி வழங்கினார்கள். இனி, சமூகத்துக்கு நான் என்ன செய்யப்போகிறேன் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது” என்கிறார் செல்வம்.

விளையாட்டும் உரையாடலும்

உனக்கு என்ன பிடிக்கும்?

பிளஸ் 2 முடித்தவருக்கு, கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோதும் வறுமை உடனடியாக வேலைக்குச் செல்லும்படி அழுத்தியது. குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக வேலை செய்தபடியே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.ஏ பட்டம் பெற்றார். அதிலிருந்து இன்றுவரை குழந்தைகளுடன் நாடகக்கலை வழியாகப் பயணித்து வருகிறார்.

கல்வியில் நாடகத்துக்கான தேவைகுறித்துப் பேசிய செல்வம், “படி, பரீட்சை எழுது என்கிற இரண்டையும் குழந்தைகளிடம் சொல்லும் ஆசிரியர்களும் பெற்றோரும், ‘உனக்கு என்ன பிடிக்கும்?’ என்று அவர்களிடம் கேட்பதில்லை. படிப்பைத் தாண்டி ஓவியம் வரைதல், நடித்துக்காட்டுதல், பேச்சுப் புலமை இப்படி எத்தனையோ திறமைகள் குழந்தைகளிடம் உள்ளன. ஆனால், முதல் இரண்டிலும் சோபிக்காமல் போனால் உருப்படாத குழந்தையாக முடிவுகட்டிவிடுகிறோம். நான் நுழையும் வகுப்பில் முதலில் கால்பந்து விளையாட்டில்தான் தொடங்குவேன். குழந்தைகளுக்கு என்ன பிடிக்கிறதோ அதை மையப்படுத்தி ஆடி, பாடி, நடித்து பாடம் கற்க உதவுவேன்.

’விடியல்’ அறக்கட்டளை தோழர்களுடன்

தெரியாது என்று சொல்லும் ஆசிரியர்

எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அறிமுகம், பிரச்சினை, முயற்சி, முடிவு என நான்காக அதைப் பிரித்துக்கொள்ளச் சொல்வேன். உதாரணத்துக்கு, ’தாகமுள்ள காகம்’ கதையை எடுத்துக்கொள்வோம். இதில் வறண்ட பிரதேசத்தில் பறக்கும் காகம் என்பதுதான் தொடக்கம், தொண்டை வறண்டு தாகத்தில் காகம் தவிப்பது பிரச்சினை, பானையில் கற்களைப் போடுவது முயற்சி, பானையின் கீழிருக்கும் நீர் மேலெழ... காகம் அதைப் பருகி மகிழ்வது முடிவு. இப்படி அறிவியல், கணித, வரலாற்றுப் பாடங்களையும் அழகாகப் பிரித்து நாடகமாக மாற்றி நடித்து, கற்று மகிழலாம்.

என்னுடைய வகுப்பறையில், குழந்தைகளே கதையை உருவாக்கி நாடகமாக மாற்றுவார்கள். நான் தூண்டுகோலாக மட்டுமே செயல்படுவேன். சொல்லப்போனால், ‘தெரியாது’ என்று சொல்லும் ஆசிரியர் நான். தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கும் ஆசிரியர்கள் சலிப்பூட்டுபவர்களாக ஆகிவிடுகிறார்கள். 24 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பறைக்குச் சென்றால், அங்கிருந்து நான் வெளியேறும்போது மொத்தம் 25 ஆசிரியர்கள் அங்கிருப்போம். ஏனென்றால், குழந்தைகளே சிறந்த ஆசான்கள்” என்றார்.

ஆன்லைன் வழி நாடகப் பயிற்சி

நீளும் உதவிக்கரம்

கலைப் பண்பாட்டுத் துறை உறுப்பினரான செல்வம் போன்றோருக்கு தமிழக அரசு கரோனா காலத்தில் குறைந்தபட்ச நிவாரணம் அளித்தது. ஆனால், கரோனா பெருந்தொற்று கடந்த ஆண்டு தீவிரமடைந்திருந்தபோது பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், குழந்தைகள் கல்வி இன்றி தவித்தனர். இந்நிலையில், செல்வத்தின் நாடகக் கல்விச் செயல்பாடுகளை ஃபேஸ்புக் வழி அறிந்துகொண்ட அமெரிக்க வாழ் தமிழரான திலீபனிடமிருந்து ஒரு கோரிக்கை வந்தது. பழனி அருகே பொருளூரில் உள்ள ‘விடியல்’ அறக்கட்டளை தோழர்களுடன் இணைந்து, அப்பகுதி அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும்படி அவர் கோரினார். 25 தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்தில் கைகோக்க, கரோனா காலத்தில் பொருளூர் பகுதியில் வீடுவீடாகச் சென்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ’நாடகக்கலை வழி அறம்’ கற்பித்தார் செல்வம்.

“இப்போது கரோனா அலை தீவிரம் அடங்கி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் பள்ளிக்கூடத்துக்குள் குழந்தைகள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களில் பலர் இதுவரை கற்றதையெல்லாம் மறந்து, அடிப்படை நடத்தைச் சார்ந்த அறத்தையும் இழந்து தடுமாறுவதை ஆசிரியர்கள் கவலையுடன் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைப் பார்க்கிறோம்; கேள்விப்படுகிறோம். இப்படி நிகழும் என்பதை ஊகித்துதான் அரசாங்கமும் குழந்தைகளை ஆசுவாசப்படுத்தவும் கற்றல் பின்னடைவிலிருந்து மீட்டுக் கொண்டுவரவும், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

இதில் எனக்கு நம்பிக்கையூட்டிய தகவல் என்னவென்றால், நான் கரோனா காலத்தில் வீடுதேடிச் சென்று நாடகம் வழியாகக் கல்வி ஊட்டிய குழந்தைகள், தற்போது பள்ளிக்குத் திரும்பியதும் உற்சாகமாகச் செயல்படுவதாகவும், சென்ற ஆண்டு எப்படி படித்து வந்தார்களோ அதிலிருந்து சற்றும் சரிவின்றி ஆர்வத்துடன் படிப்பைத் தொடர்வதாகவும் சொல்லக் கேட்கிறேன். இதற்குக் காரணம், குழந்தைகளின் ‘உள்ளம் தேடி கல்வி’யைக் கொண்டுசெல்வதே என்னுடைய குறிக்கோளாக இருந்துவருகிறது. தற்போது, தமிழக அரசு வகுத்திருக்கும் இல்லம் தேடி கல்வித் திட்டத்திலும் தன்னார்வலர்களுக்கும் நாடக வழி கல்வி குறித்துச் சிறப்புப் பயிலரங்கத்தை இலவசமாக நடத்த திறந்த மனதுடன் காத்திருக்கிறேன்” என்கிறார் செல்வம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE