உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் தேவை!

By காமதேனு டீம்

இந்தியாவில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிகள், சமணர்கள் உள்ளிட்ட 6 சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு உதவித்தொகை வழங்கிவருகிறது. மெட்ரிக்குக்கு முந்தைய (Pre-Matric), மெட்ரிக்குக்குப் பிந்தைய (Post-Matric), தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் (Merit-cum-Means based) ஆகிய 3 பிரிவுகளின்கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள அரசு அல்லது தனியார் பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்திலோ படித்துவரும் சிறுபான்மையின மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கல்லூரி மாணவர்களாயின் கடைசியாக எழுதிய பொதுத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பள்ளி மாணவர்களாயின் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு இது பொருந்தும்.

விண்ணப்பதாரர்கள் www.scholarships.gov.in இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேசிய உதவித்தொகை இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலேயே இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெறலாம். அதேநேரம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், முதலில் இதே இணையதளத்தில் மாணவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

இந்த ஆண்டு சிறுபான்மையினர் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுவரை (நவ.15) வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் நவ.1 முதல் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வந்த பிறகும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் முறையாகத் திறக்கப்படவில்லை. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கனமழை பொழிந்ததை அடுத்து பள்ளிகள் செயல்பட முடியவில்லை. இதனால், மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுபான்மையினர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசத்தை, மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்குப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE