104 வயதில் படிப்பில் கில்லி: கேரளம் கொண்டாடும் பாட்டி குட்டியம்மா

By எஸ்.சுமன்

கல்வி கற்பதற்கு வயது ஒரு பொருட்டில்லை என்பதற்கு, மற்றுமொரு உதாரணமாகி இருக்கும் 104 வயது குட்டியம்மாவை கேரளம் கொண்டாடுகிறது.

கோட்டயத்தைச் சேர்ந்தவர் குட்டியம்மா. தனது 100-வது பிறந்த நாளைக் கொண்டாடியபோது, அவரது நீண்டநாள் ஏக்கம் வெளிப்பட்டது. பால்யத்தில் பள்ளிக்கூடம் பக்கம் அனுமதிக்காத சமூகப் பின்னணியில் வளர்ந்த அவருக்கு, நாலெழுத்து படிக்க முடியாதுபோன சோகம் உள்ளுக்குள் துரத்தியது. 100 வயதுக்குப் பிறகு பள்ளி செல்லமுடியாது என்று சோர்ந்திருந்தவரை, மாநில அரசின் எழுத்தறிவுத் திட்டம் வாரி அரவணைத்துக்கொண்டது.

பெரும் தயக்கமும், கூச்சமுமாக படிக்க ஆரம்பித்தார் குட்டியம்மா. அண்மையில் நடந்த எழுத்தறிவுத் திட்டத்தின் தேர்வில் பங்கேற்றார். அதன் முடிவுகள் வெளியானதில், 104 வயது மூதாட்டி தேர்வெழுதிய விபரம் கல்வி அமைச்சர் வாசுதேவன் சிவன்குட்டி வசம் போனது.

குட்டியம்மாவின் வயது மட்டுமன்றி அவர்பெற்ற மதிப்பெண்களும் வாசுதேவனை வாய்பிளக்க வைத்தது. அந்த அரசுத் தேர்வில் 100-க்கு 89 மதிப்பெண்களை குட்டியம்மா பெற்றிருந்தார். இந்தத் தகவலை ட்விட்டர் மூலமாக அறிவித்து பெருமிதம் கொண்டிருக்கிறார் வாசுதேவன்.

கேரள மாநிலம், அதன் கல்வி அடைவுக்காகவும் சிறப்பு பெற்றது. அந்த இடத்தை கைவிடாதிருக்க, மேலும் பல திட்டங்களை மாநில அரசு முன்னெடுத்து வருகிறது. பள்ளி செல்லும் வயதுடைய பிள்ளைகளுக்கு மட்டுமன்றி, குட்டியம்மா போன்ற கல்வியறிவு புறக்கணிக்கப்பட்டவர்களையும் குறிவைத்துச் செயல்படுகிறது. நம்மூர் அறிவொளித் திட்டத்தின் பாணியில், கேரள அரசு தீவிரப்படுத்திய புதிய நடைமுறைகளுக்கு வரவேற்பும் அதிகரித்து வருகிறது. குட்டியம்மா மட்டுமல்லா, அந்தத் தேர்வில் அண்மையில் பங்கேற்ற பலரும் 70 மற்றும் 80 வயதுகளை கடந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE