எங்கே செல்கிறது சத்துணவுத் திட்டத்தின் பாதை?

By ம.சுசித்ரா

அனைவரும் கல்வி பெற சாதிய பாகுபாடும் வறுமையும் பெருந்தடையாக இருந்தபோது, அதை முறியடிக்க மதிய உணவுத் திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 60 ஆண்டுகால வரலாற்றைத் தாங்கி நிற்பதாகப் பரவலாக அறியப்படும் தமிழக மதிய உணவுத் திட்டம், உண்மையில் நூற்றாண்டு கண்ட திட்டமாகும்.

1960-களில் காமராஜர் தமிழகம் முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார், பிறகு 1982-ல் எம்ஜிஆர் ‘சத்துணவுத் திட்டம்’ என்ற தனித் துறையை நிறுவினார். பின்னர் கருணாநிதி இத்திட்டத்தில் முட்டை சேர்த்தார். ஜெயலலிதா வெவ்வேறு விதமாகச் சமைக்கப்பட்ட முட்டை, கலவை சோறு அறிமுகப்படுத்தினார் என்கிற வரலாறு மட்டுமே பரவலாக அறியப்படுகிறது.

ஆனால், இதன் வேர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆழப் பதிந்தவை. ஆம்! ஏழை பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிகளை நோக்கிச் செல்வதில் பசி மிகப் பெரிய தடைக்கல்லாக இருப்பதால், அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாட்டின் முதல் பட்டியலின நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி.ராஜா சட்டப்பேரவை கவுன்சிலில் 1922-ல் வலியுறுத்தினார். இதை அடுத்து, 1924-ல் சென்னை மாகாணத்தில் சிங்காரவேலரும் எல்.சி.குருசாமியும் இணைந்து தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தினர்.

இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றுப் பயணத்தைக் கண்ட தமிழக மதிய உணவுத் திட்டத்தை நிறைவேற்ற, 43 ஆயிரத்துக்கும் அதிகமான சத்துணவு மையங்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 130 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சமைத்துக் கொடுக்கும் உணவு கிட்டத்தட்ட 50 லட்சம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுவருகிறது. இதில் தொடக்கப்பள்ளி தொடங்கி பத்தாவதுவரை படித்துவரும் ஒவ்வொரு அரசுப் பள்ளி மாணவ - மாணவிக்கும் நாளொன்றுக்கு எவ்வளவு கலோரி, புரதச் சத்து அளிக்கப்பட வேண்டும் என்ற ஊட்டச்சத்து நெறிமுறை அட்டவணையும் வகுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள சத்துணவு திட்டத்துக்கான அட்டவணை

தமிழக அரசு வெளியிட்டுள்ள சத்துணவு திட்டத்துக்கான அட்டவணை

தமிழக அரசு வெளியிட்டுள்ள சத்துணவு திட்டத்துக்கான அட்டவணை

அரசிடமா, தனியாரிடமா?

இந்நிலையில் தமிழக அரசு காலை சத்துணவு கொடுக்கவிருப்பதாக 2019 இறுதியில் அறிவித்தது. ஆனால், அந்தப் பொறுப்பு ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்ற மத பரப்புரை செய்துவரும் ‘இஸ்கான்’ அமைப்பு நடத்தும் ‘அட்சய பாத்ரா’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதிலும், 2020 பிப்ரவரி மாதம் ‘அட்சய பாத்ரா’ சமையல் கூடத்துக்கு, சென்னை கிரீம்ஸ் சாலையில் 20 ஆயிரம் சதுர அடி நிலத்தையும், பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் சுமார் 35 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் அதிமுக அரசு ஒதுக்கியது சர்ச்சைக்குள்ளானது.

முழுச் சோற்றில் மறைத்த ஊழல்

அதன் பிறகு கரோனா பெருந்தொற்று உலகை பீடிக்க, 2020 மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இதனால் அதுவரை வழங்கப்பட்டுவந்த சத்துணவும் பல மாதங்களாக அளிக்கப்படவில்லை. சமூக ஆர்வலர்களும் ஊடகங்களும் இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பவே உலர்ந்த நிலையில் அரிசி, பருப்பு, முட்டை ஆகியவை பள்ளிகளில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இதனிடையே, ஏற்கெனவே 2018-ல் தமிழக சத்துணவுத் திட்டத்தில் ரூ.2,400 கோடி ஊழல் நிகழ்ந்திருப்பது அம்பலமானது. இந்நிலையில். கரோனா காலத்தில் உலர் சத்துணவுப் பண்டங்கள் விநியோகம் செய்யப்பட்டதில் மேலும் பலமடங்கு முறைகேடு நடந்ததாகப் பேசப்படுகிறது.

ஆயிஷா இரா.நடராசன்

உலகமெங்கும் மதிய உணவுத் திட்டம்

ஏற்கெனவே 2019-ல் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் காலைச் சிற்றுண்டியுடன், மதிய உணவில் சிறுதானியங்களைச் சேர்த்து மாணவர்களுக்கு அளிக்கும்படி பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை தற்போது மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுபோக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், சத்துணவுத் திட்டத்தில் காலையில் பால் வழங்கப்படும், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அரசுப் பணியாளர்களாக்கப்படுவர் என்று உறுதியளித்தது.

ஆனால், நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் கல்விக்கூடங்கள் திறக்கப்பட்ட பிறகும் மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி, பால் வழங்குதல் குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இச்சூழலில் சத்துணவுத் திட்டத்தின் இன்றைய நிலைகுறித்து கல்வியாளர் ஆயிஷா இரா. நடராசனிடம் கேட்டபோது, “இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் மதிய உணவுத் திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதே பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் பல நாடுகள் தொய்வின்றி மதிய உணவைப் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கின. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், சமைக்கப்பட்ட உணவு தினமும் மதியம் 12 மணிக்குப் பொட்டலமாக விநியோகிக்கப்பட்டது. அண்டை நாடான வங்கதேசத்தில் உணவுப் பொட்டலங்கள் வேன்களில் எடுத்துச் செல்லப்பட்டு மாணவர்களின் வீட்டிலேயே ஒப்படைக்கப்பட்டன” என்றார்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள தமிழகக் குழந்தைகள்

மேலும், ”இத்தனைக்கும் தமிழகக் கல்வியின் முதுகெலும்பாக விளங்குவது சத்துணவுத் திட்டமே. ஆனால், அத்தகைய சத்துணவுத் திட்டக் கூடங்கள் கடந்த 18 மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்தன. மாற்று ஏற்பாடாக உலர் உணவு வழங்கப்பட்டாலும் அது மாணவர்களைச் சென்றடைந்ததா அல்லது முறைகேடாக விற்கப்பட்டுவிட்டதா என பல கேள்விகள் எழுகின்றன. இதனால்தான் தமிழகக் குழந்தைகள் பல மாநிலங்களைக் காட்டிலும் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களாக இருப்பதாகச் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றைச் சரி செய்ய வேண்டிய காலகட்டத்தில் சத்துணவுத் திட்டத்தையே ஒழிக்கும் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. 1920-களிலேயே தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட மதிய உணவு திட்டத்தை, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என தமிழகத்தின் அத்தனை ஆட்சியாளர்களும் முழு வீச்சில் நடைமுறைப்படுத்தி இந்தியாவுக்கே முன்னுதாரணமான திட்டமாக்கினார்கள்.

தேசிய கல்விக் கொள்கையின்கீழ்...

இதைக் கண்டுணர்ந்து, 2002-ல் உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்பிறகே, சர்வசிக்‌ஷா அப்யானுடன் மதிய உணவுத் திட்டத்தை மத்திய அரசு இணைத்தது. இதன்பிறகே இந்தத் துறையில் மத்திய அரசின் தலையீடும் ஊழலும் மலிந்தது. இந்நிலையில் மதிய உணவுத் திட்டத்துக்கு ’பிரதான் மந்திரி போஷான் சக்தி நிர்மான்’ என்ற பெயர்மாற்றத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் செய்தது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்குள் இது கொண்டுவரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி காலை உணவு திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும்படி மத்திய அரசு சொல்கிறது. அதையொட்டியே ’அட்சய பாத்ரா, ’ஏக்தா சக்தி’, ‘நந்தி ஃபார்மேஷன்’, ‘நளா பிரதர்ஸ்’ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை மத்திய அரசு தமிழகத்துக்குள் புகுத்த முயல்கிறது.

இந்நிறுவனங்கள் யாவும் மத்திய அரசின் உணவரசியலை சத்துணவு திட்டத்துக்குள் புகுத்த முயல்கின்றன. முட்டை, இறைச்சி சாப்பிட்டால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடையாது போன்ற அறிவியலுக்குப் புறம்பான பரப்புரையில் அவை ஈடுபடுகின்றன. இவற்றை முறியடிக்க வேண்டுமானால் காலை உணவையும் தமிழக அரசே கொடுக்க வேண்டும். அதன் மூலம், வேலையின்றி தவிக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களில் சில ஆயிரம் பேருக்கேனும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தலாமே” என்றார் நடராசன்.

பரமேசுவரி

சமூகநலத் துறைக்கே அதிகாரம்

‘அரசு என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பும்போதே, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும்’ என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் வேலூர் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பரமேசுவரி.

அவர் கூறும்போது, “இதுவரை 4 அரசுப் பள்ளிகளில் நான் பணிபுரிந்திருக்கிறேன். அங்கு வேலைபார்த்த சத்துணவுகூட ஊழியர்கள் பத்தாயிரத்துக்கும் குறைவாக ஊதியம் கொண்ட பணியிடத்தைப் பெறவே பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். லஞ்சம் கொடுக்க தாங்கள் பட்ட கடனை நேர் செய்ய, முட்டைகளைப் பதுக்கி விற்பது, குப்பையில் வீசப்பட்ட காய்கறிகளைக் கொண்டுவந்து சமைத்துவிட்டுப் பொய்க் கணக்கு எழுதுவது, 50 மாணவர்களுக்குச் சமைத்துவிட்டு 200 என்று பொய் கணக்கெழுதுவது போன்ற முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள்.

இதுபோக, அந்த ஊழியர்களின் சாதியைப் பொறுத்து அவர்கள் ஒதுக்கப்படுவதும் அல்லது சத்துணவு சாப்பிட வரும் மாணவர்களில் பட்டியலினத்தைச் சேர்ந்தோர் அவமதிக்கப்படுவதும் தொடர் நிகழ்வாகவே உள்ளது. அரசு நிர்ணயித்துள்ள அட்டவணைப்படி 5 நாட்களும் விதவிதமாக உணவைச் சமைத்துத் தர வேண்டும். ஆனால், பல பள்ளிகளில் அது பின்பற்றப்படுவதில்லை. சமூகநலத் துறையின்கீழ் சத்துணவுத் திட்டம் வருவதால், அதைத் தட்டிக்கேட்கும் முழு அதிகாரம் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர்களுக்கில்லை. இதற்கு மாற்றாக எங்களது பள்ளியிலேயே காய்கறித் தோட்டம் வளர்த்து, அன்றாடம் மாணவர்களது சத்துணவுக்குத் தேவையான காய்கறிகளை நான் வளர்க்கத் தொடங்கினேன். அதைக் கொடுத்து சமைக்கச்சொல்லி மாணவர்களுக்கு உண்மையான சத்துணவு வழங்கும் பணியை முன்னெடுத்துள்ளேன். அதேபோல சாப்பாட்டில் புழு, பூச்சி இருந்தால் மாணவர்களே துணிந்து தட்டிக்கேட்கும்படி அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிவருகிறேன்” என்றார் பரமேசுவரி.

‘பசியோடு வந்து, பசியோடு படித்து, பசியோடு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, பள்ளிகளிலேயே ஒருவேளை உணவு வழங்கப்படும்’ என்ற கொள்கையோடு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம், பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் தொடங்கி அக்குழந்தைகளின் கல்வி இடைநின்றுபோகாமல் பாதுகாத்தல்வரை பெரும்பங்கு வகிக்கிறது. அதிலும், பெண் குழந்தைகளுக்குக் கல்வி கிடைப்பதில் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதில் இத்திட்டத்துக்கு முக்கியப் பங்குள்ளது. இவ்வளவு மகத்துவம் வாய்ந்த திட்டத்தில் நிலவும் முறைகேடுகளைக் களைந்து, சத்தான உணவு நம் மாணவச் செல்வங்களுக்குச் சென்றடைவதற்கு உரிய நடவடிக்கையை அரசு முன்னெடுக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE