பேய் எனப் பெய்வது ஏன் மழை?

By என்.சுவாமிநாதன்

கேரளத்தை மீண்டும் ஒருமுறை புரட்டிப் போட்டிருக்கிறது பெருமழை. ஆக்ரோஷமாக பெய்த மழைக்கும், ஆங்காங்கே நிகழ்ந்த நிலச்சரிவுகளுக்கும் இதுவரை 39 பேர் உயிர் இழந்துள்ளனர். 217 வீடுகள் முற்றாக இடிந்துபோய்விட்ட நிலையில் 3,851 குடும்பங்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகள் சேதமாகி, பொருட்களை இழந்து முகாம்களில் நிர்கதியாக அம்மக்கள் நிற்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே, அக்டோபர் மாதத்தில் கேரளம் சந்திக்கும் பெரும் பிரச்சினையாகியிருக்கிறது பெருமழையின் ருத்ரதாண்டவம்!

ஓகி புயலின் தாக்கத்துக்குப் பின்பே, அக்டோபர் மாதத்தில் கேரளம் அவஸ்தைக்குள்ளாவதாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். கேரளம் தென் மேற்கு, வடகிழக்கு ஆகிய இருபருவ மழைகளையும் பெறும் பிரதேசம். இதில் தென்மேற்குப் பருவமழை செப்டம்பரில் முடியும். வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பரில் முடியும். ஆனால், செப்டம்பரில் முடிவடைய வேண்டிய தென் மேற்குப் பருவமழை அக்டோபரின் இறுதியிலும்கூட வீரியம் குறையாமல் வெளுத்துவாங்கி வருகிறது. வடகிழக்குப் பருவமழை இன்னும் தொடங்காத நிலையிலேயே தண்ணீரால், கண்ணீரில் மிதக்கிறது கேரளம். பெருமழைக்குப் பின்னான உள்கட்டமைப்புக்குப் பெரும் பங்களிப்புச் செலுத்த வேண்டிய நெருக்கடியிலும் இருக்கிறது அம்மாநிலம்.

பெருமழையால் மூன்றாண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்ட இடுக்கி அணை

இதுகுறித்து, கேரள மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணிபுரியும் ராஜீவனிடம் ‘காமதேனு’ மின்னிதழுக்காகப் பேசினோம்.

“அக்டோபர் 12-ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக்கடலில் உருவாகியிருப்பதாக ஐ.எம்.டி எச்சரிக்கை விடுத்தது. முதலில் பலத்த காற்று வீசும் என்றே எச்சரிக்கை கொடுத்தார்கள். ஆனால், 16-ம் தேதியிலிருந்து மழை தீவிரமடையத் தொடங்கியது். இதனால் 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடப்பட்டது. கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிர் இழந்தனர். 2018, 2019-ம் ஆண்டுகளிலும் அக்டோபர் மத்தியில் மழையால் இதுபோன்ற பேரழிவைக் கேரளம் சந்தித்தது. 2020-ம் ஆண்டில் மட்டும்தான் அக்டோபரில் மழை பெய்தும், பெரிய சேதம் இல்லை. புள்ளிவிவரங்கள், தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் இதை வடகிழக்குப் பருவமழை என்று பொதுவாகச் சொல்லிவிடலாம். ஆனால், தென் மேற்குப் பருவமழையே இன்னும் முடியாமல் கடைசி நேரத்தில் வீரியத்துடன் வெளிப்பட்டது என்றே நான் கருதுகிறேன்” என்றார் ராஜீவன்.

வேணு நாயர்

இந்நிலையில் கேரளத்தின் வானிலை ஆய்வாளர் வேணு நாயர் அரசுக்கு ஒரு அறிக்கை கொடுத்துள்ளார். அதில், ‘கேரளத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழை எனக் குறிப்பிட்டாலும் அது மைய மண்டலத்தை மட்டுமே குறிக்கும். இது, தீபகற்பத்தின் முனையில் இருந்து நவம்பர் 30-ம் தேதிதான் முழுமையாகப் பின்வாங்கும். அதற்குள்ளாகவே கேரளத்தில் வடகிழக்குப் பருவமழையும் தொடங்கிவிடுகிறது. சில நேரங்களில் 2 மழைகளையும் சேர்த்துப் பெறும் சூழலும் கேரளத்தில் நடக்கிறது. கேரளத்தில் காலையில் தென் மேற்கு பருவமழையும், மாலையில் வடகிழக்குப் பருவமழையும்கூட பெய்யும் சாத்தியம் இதனால் எழுகிறது. இதனோடு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும் சேர்ந்துவிட்டால், மழையின் தீவிரம் அதிகரித்துவிடுகிறது. விஷயம் மிகவும் எளிமையானதுதான். முன்பெல்லாம் தென்மேற்குப் பருவமழை முழுதாக முடிந்ததும், வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இப்போது தென்மேற்குப் பருவமழை வீரியம் இழக்கும்முன்பே, வட கிழக்குப் பருவமழையும் தொடங்கிவிடுகிறது. இது இயற்கையின் அதிசயம்!

இப்போது உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தென்மேற்குப் பருவமழையின் பகுதி அல்ல. பருவமழை காலத்தில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு என்பது இதிலிருந்து முற்றாக வேறுபட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே, அரபிக்கடலில் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வங்காள வரிகுடா குளிர்ச்சி நிலைக்குச் சென்றதுபோல், அரபிக்கடல் கடுமையான வெப்பமயமாதல் நிலைக்குச் சென்றுள்ளது. அதனால்தான் அரபிக்கடலை மையமாக வைத்து அதிகப் புயல்களும் ஏற்படுகிறது’ என்று தொடங்கி, நீண்ட அறிக்கையாகக் கொடுத்துள்ளார் வேணு நாயர்.

மனிதத் தவறுகளும் காரணம்

‘இயற்கை நிகழ்த்திய வன்முறை’ என ஒற்றை வார்த்தையில் இதைக் கடத்திவிட முடியாது. இதன் பின்னால் மனிதப் பிழைகளும் இருப்பதாகவும் பேச்சு எழுந்திருக்கிறது. அரபிக் கடலில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றங்கள் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் இருந்தும் வந்தவைதான் என்பதும் கேரள விஞ்ஞானிகளின் வாதம். மனிதத் தலையீடுகளும், அவர்கள் இயற்கைக்குச் செய்யும் தொந்தரவுகளுமே அனைத்துத் தவறுகளுக்கும் வேர் என அவர்கள் சொல்கிறார்கள்.

சீனா போன்ற நாடுகள் கடலில் அதிக அளவு கார்பனைச் செலுத்துகின்றன. இப்படி செலுத்தப்படும் கார்பன்களில் 40 சதவீதம்வரை கடல் உறிஞ்சிக்கொள்கிறது. அது கடலின் வெப்பத்தையும் அதிகரித்துவிடுவதாக எச்சரிக்கிறார்கள். கேரளம் எதிர்கொள்ளும் தாறுமாறான பருவமழை ஒரு தொடக்கம் மட்டும்தான். இதேபோல் மனிதத் தலையீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும்போது, கேரளம் இன்று சந்திக்கும் பிரச்சினையை நாளை பல மாநிலங்களும், நாடுகளும் சந்திக்கக் கூடும்!

பினராயி விஜயன்

நம்பிக்கையூட்டிய பினராயி

கேரள சட்டப்பேரவையில் பெருமழை, வெள்ளம் குறித்துப் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “எதிர்பாராத இந்தத் துயரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, முழு மாநிலத்திற்கும் கடினமானது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த சபை கனத்த மனதோடு இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து வருத்தத்தைப் பதிவுசெய்துகொள்கிறது. துயரப்படும் குடும்பங்களை மாநில அரசு ஒருபோதும் கைவிடாது. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் லட்சத்தீவுப் பகுதியில் உருவான இரட்டைக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தீவிரத்தில் இருந்து கேரளம் மெல்ல மீண்டுவருகிறது” என நம்பிக்கையூட்டியுள்ளார்.

ஆனால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், “கேரளத்தில் பேரிடர் மேலாண்மை அமைப்பை அரசு இன்னும் வலுப்படுத்த வேண்டும். அடிக்கடி இங்கே இயற்கைப் பேரிடர்கள் நடந்துவந்தாலும் மாநிலத்தில் எச்சரிக்கை அமைப்புகளின் தோல்வியையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தத் தொடங்கியுள்ளது.

இடிந்த பகுதிகளை பார்வையிடும் அமைச்சர் ரோஸி அகஸ்டின்

கூட்டத்தொடர் ரத்து

இதுகுறித்து கேரள நீர்ப் பாசனத் துறை அமைச்சர் ரோஸி அகஸ்டினிடம் பேசினோம்.

“மாநிலம் முழுவதும் 304 மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதேநேரத்தில் நடந்துவந்த சட்டசபைக் கூட்டத்தொடரை ரத்து செய்துவிட்டு எம்எல்ஏ-க்களைத் தொகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கைகள், 25-ம் தேதிதான் மீண்டும் கூடுகிறது. கனமழை எச்சரிக்கை வந்ததுமே பலரையும் முகாம்களுக்கு அழைத்து வந்துவிட்டோம். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளின் பட்டியல் எடுக்கப்பட்டுவருகிறது. அரசு சார்பில் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்” என்றார் ரோஸி அகஸ்டின்.

அளவாகப் பெய்கையில் அமிர்தமாகத் தெரியும் மழையே, ஆக்ரோஷம் காட்டுகையில் ஆலகால விஷமாக மாறுவது ரணம்தான். பேரிடர்களை எதிர்கொள்ளும் நவீன உத்திகளைக் கேரளம் விரைவில் கற்கட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE