நீட் மட்டுமல்ல... நிறையப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும்!

By ம.சுசித்ரா

ஏழாம் வகுப்புவரை படுசுட்டிப் பெண்ணாக இருந்தவள் காளீஸ்வரி. எப்போதுமே துள்ளலோடு காணப்படுவாள். சும்மாவே அவளுடைய கண்கள் குறும்புத்தனமாகச் சிரிக்கும். வாய் திறந்தாலும் மூடாது. கரோனா பெருந்தொற்றுக் கால ஊரடங்கால் ஒன்றரை ஆண்டுகள் கழித்து, பள்ளிக்கூடத்துக்கு 9-ம் வகுப்புக்குத் திரும்பியபோது வேறொருத்தியாக காளீஸ்வரி மாறிப் போயிருந்தாள்.

யாரிடமும் பேசுவதில்லை. அவள் கண்களில் குறும்போ, சிரிப்போ துளியும் தென்படவில்லை. பள்ளிக்கூட வாசமின்றி விலகி இருந்ததால், பாடத்திட்டத்தை ஒட்டி வகுப்பெடுக்காமல் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் உரையாடலில் வகுப்பாசிரியை ஈடுபட்டார்.

சில வாரங்கள் கழித்து, ’பெண் குழந்தைகள் தினம்’ (அக்.11) வந்தது. ‘இன்றைய பெண் பிள்ளைகளின் நிலை’ என்ற தலைப்பில் மனதில் உள்ளதை எழுதும்படி மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை. வகுப்பறையில் இருந்த ஒவ்வொருவரும் எழுதிக் கொண்டிருக்கையில், ”என் வீட்டில் அடிமைபோல இருக்கிறேன்” என்றெழுதி, இறுக்கமான மவுனத்தைக் கலைத்து வெடித்தழுதாள் காளீஸ்வரி.

அவள் அழுததும் அருகிலிருந்த ஜென்ஸியும் மனம் வெதும்பினாள். 10-வதுக்கு மேல், மகள்கள் படிக்கத் தேவையில்லை என்ற எண்ணம் புரையோடிப்போன குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இவர்கள்.

தப்பிப்பிழைத்தவர்கள்

கரோனா காலத்தில் ஆன்லைன் வழியாகக் கல்வி பயிலலாம் என்றால், இருவருக்கும் ’ஒழுக்க நடவடிக்கையாக’ அலைபேசி மறுக்கப்பட்டது. அண்ணனும் தம்பியும் இஷ்டம்போல அலைபேசியைப் பயன்படுத்தும்போது, இவர்கள் அலைபேசியைத் தொட்டாலே திட்டு விழுந்தது.

பதின்பருவத்தை எட்டிய சிறுமிகள் அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்குச் செல்ல வேண்டுமானாலும் அண்ணனோ, தம்பியோ உடன் வந்தனர். நாளடைவில், சகோதரர்களே இவர்களைக் கிள்ளுக்கீரையாக நடத்துவது அதிகமாகிப்போனது. சில தினங்களுக்கு முன்னால், காளீஸ்வரி எதிர்வீட்டுச் சிறுவர்களோடு தெருவில் விளையாடினாளென்று, அவள் அப்பா பச்சை மட்டை கொண்டு கொடூரமாக அடித்துவிட்டார். இத்தனையும் சேர்ந்து காளீஸ்வரியை வேறொருத்தியாக மாற்றிவிட்டிருந்தன.

காளீஸ்வரியும் ஜென்ஸியும் கரோனா காலம் கடந்தும் தப்பிப்பிழைத்து, மீண்டும் பள்ளிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இன்னும் ஆயிரக்கணக்கான சிறுமிகளின் கதி என்னவென்று தெரியவில்லை.

உமா மகேஸ்வரி

2 லட்சம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எங்கே?

ஏற்கெனவே, செப்டம்பர் 1-லிருந்து 9-ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்தபடியாக நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வகுப்பு குழந்தைகளுக்கும் பள்ளிகளின் கதவுகள் திறக்கப்படவுள்ளன. அதற்கு முன்னதாக கடந்த 20 மாதங்களில் நேர்ந்த கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்காக, ‘மக்கள் பள்ளி’ திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கண்டுபிடிக்கும் பெரும்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், பள்ளி நேரம் முடிந்தபிறகு தன்னார்வலர்கள் மூலமாக நாளொன்றுக்கு ஒன்றரை மணிநேரம் வீதம் வாரம் குறைந்தது 6 மணிநேரம் செயல்முறை கற்பித்தல் வகுப்புகள் நடைபெறவிருக்கிறது. 20 மாணவர்களுக்கு ஒருவர் என்ற விகிதாச்சாரத்தில் மாநிலம் முழுவதுக்குமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். சிறப்பாகச் செயல்படும் தன்னார்வலர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படவிருக்கிறது.

கல்விக்கூடங்களுக்கு வெளியிலும் குழந்தைகளுக்கு வழிகாட்டும் கல்வித் தொண்டர்கள் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்கு அப்பால் பல சிக்கல்கள் இருப்பதாக ஆசிரியர்கள் கவலைகொள்கின்றனர்.

தனியார் பள்ளிகளை விட்டு அரசுப் பள்ளிகளில் அண்மையில் 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட பலரால் ஒப்புக்கொள்ளப்பட்ட அதிகாரபூர்வமான தகவல். அப்படியிருக்க ஓராசிரியர்களோடும் ஈராசியர்களோடும் தத்தளித்துக் கொண்டிருக்கும் பள்ளிகளுக்குக் கூடுதலாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.

இயந்திரமல்ல ஆசிரியர்கள்!

இதுதவிர, ஏற்கெனவே பணிபுரிந்துவரும் ஆசிரியர்களின் பிரச்சினைகளைப் பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியரும் கல்விச் செயற்பாட்டாளருமான உமா மகேஸ்வரி, “கற்றல் இடைவெளி ஏதோ கரோனா காலத்தினால் உண்டானதல்ல. இது தமிழக பள்ளிக் கல்விச் சூழலில் நீண்டகாலமாக நிலவும் சிக்கல். அதற்குக் கல்வித் தொண்டர்கள் மூலமாக மட்டும் தீர்வுகாண முடியாது. ஆசிரியர்களைக் கல்வி கற்பிக்கும் ஆசானாகச் செயல்படவிடாமல் பதிவேடுகளைத் தயாரிக்கும் இயந்திரமாக மாற்றிவைத்திருக்கிறது கல்வி அமைப்பு. இலவச நோட்டு - புத்தகம், பை, சீருடை, செருப்பு உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டதற்கான கணக்கு, மாணவர் வருகைப்பதிவு, கரோனா காலத்தில் ஆன்லைனில் வகுப்புகளில் பங்கேற்கும் விவரம், மாணவர்கள் செய்யும் (?) ப்ராஜெக்ட் ஆகியவற்றைத் தொகுத்துச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட அலுவலகப் பணிகளே ஆசிரியர்களின் ஜீவனைப் பிழிந்தெடுத்துவிடுகின்றன.

அதிலும் பெரும்பாலான அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை ஆசிரியர் மட்டுமே வேலை பார்த்துவரும் நிலையில், இவை எல்லாம்போக எங்கிருந்து சிறப்பாகப் பாடம் கற்பிப்பார்கள்? எப்படியும் மாணவர்களும் பெற்றோரும் ஏன் ஒழுங்காகப் பாடம் நடத்தவில்லை என்று முகத்துக்கு நேராகக் கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனால், பதிவேடுகள் எங்கே என்று கல்வி அதிகாரிகள் சட்டையைப் பிடிப்பார்கள். இதனால் செக்குமாடாக கோப்புகளைத் தயாரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறார்கள் ஆசிரியர்கள்” என்றார் உமா மகேஸ்வரி.

பள்ளிதோறும் 5 ஆசிரியர்கள் அவசியம்

மேலும் அவர் கூறும்போது, “இது அன்றி பட்டதாரி ஆசிரியர்கள் மீது வாக்குச்சாவடி அலுவலராகச் செயல்படும் பொறுப்பும் சுமத்தப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதுதொடர்பான வேலைகள் கொடுக்கப்படுகின்றன. 2 நாள் தேர்தல் பணிகளை ஆசிரியர்கள் ஏற்பதென்பது வேறு இது முற்றிலும் வேறு என்பது பொதுவில் மக்களுக்குத் தெரியாது. மறுபுறம், ‘கை நிறைய அரசாங்க சம்பளம் வாங்கிக்கிட்டு என்னதான் செய்கிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்?’ என்ற கேள்வி உலாவிக்கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு தொடக்கப் பள்ளிக்கும், இடைநிலைப் பள்ளிகளுக்கும் ஐந்தாசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கற்பிக்கும் பணியில் மட்டும் ஈடுபடுத்தப்பட அனுமதிக்கப்பட்டாலே தீர்வு காணலாம். இது பற்றியெல்லாம் என்றாவது கல்வி அலுவலர்களும் ஆசிரியர் பணி ஆராய்ச்சியாளர்களும் கவலைப்பட்டதுண்டா? தமிழக கல்விச்சூழலில் நீட் மட்டும்தான் ஒரே பிரச்சினையென நினைத்துக்கொண்டிருக்கிறீரா?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் உமா மகேஸ்வரி.

யாரெல்லாம் தன்னார்வலர்கள்?

இந்நிலையில், ’மக்கள் பள்ளி’ என்ற பெயரைக் கல்வித் தொண்டர்களுக்குச் சூட்டுவதே ஆட்சேபனைக்குரியது என்ற குரலும் ஒலிக்கிறது. இத்தனை காலம் அரசுப் பள்ளிகளைத்தானே மக்கள் பள்ளி என்றழைத்தோம்! ஆனால், தற்போது அதற்கு மாற்றாக அரசு கல்விக்கூடங்களுக்கு வெளியே செயல்படுபவர்களை அழைப்பதேன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதுவும் தேசிய கல்விக் கொள்கையில் பள்ளிகளுக்குள் கல்வித் தன்னார்வலர்கள் அனுமதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டது, பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதை சாக்காக வைத்து தகுதியற்ற, சமூகப் பொறுப்பற்ற, சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடியவர்கள் ஊடுருவக்கூடும் என்ற சந்தேகம் முளைத்தது. தற்போது அதன் மறுவடிவமாக, ‘மக்கள் பள்ளி’ திட்டம் மாறக்கூடும் என்ற அச்சம் படர்ந்துவருகிறது. அதிலும் கிருஷ்ணகிரியில் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தன்னார்வலர்களாகக் கணக்குக் காட்டப்பட்டதாகச் சர்ச்சை கிளம்பியுள்ளது.

உதய லட்சுமி

இவ்வளவு மெனக்கிடலா?

இந்நிலையில், முதற்கட்டமாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பயிற்சிக் கூட்டம் அக்.11 அன்று சென்னையில் டிபிஐ வளாகத்தில் நடைபெற்றது. இதில் 8 மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ’மக்கள் பள்ளி’ ஒருங்கிணைப்பாளர்களாகப் பங்கேற்றுக் கலந்துரையாடினர். அவர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் உதய லட்சுமி கூறுகையில், ”ஒன்றரை ஆண்டுகளாகக் கல்விக்கூடங்கள் செயல்படாத நிலையில் மீதம் இருக்கும் கல்வியாண்டில் வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடங்களுக்குக் குழந்தைகள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படவிருக்கிறார்கள். பள்ளி நேரம் போக 1 முதல் 8 வகுப்புகள்வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி தன்னார்வலர்கள் மூலமாக ‘மாலை பள்ளி’யில் எழுதல், வாசித்தல் உள்ளிட்ட மொழிப் பயிற்சியும் அடிப்படை கணிதமும் அளிக்கப்படவிருக்கிறது. இதற்கு உரித்தான கல்வித் தொண்டர்களைக் கண்டுபிடித்து, இணையம் வழியாக அவர்களை விண்ணப்பிக்கச் சொல்லும் பொறுப்பு, என்னைப் போன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அந்தக் கல்வித் தொண்டர்களுக்குக் கற்றல் கையேட்டை வழங்க, 200 கோடி ரூபாய் செலவழித்திருப்பதாகச் சொல்லப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்படவிருப்பதாகச் சொல்லப்பட்டு வந்த 1,000 ரூபாய் உறுதிப்படுத்தப்படவில்லை. நாடகம், வீதி நாடகம், விநாடி-வினா, ஓவியம் உள்ளிட்ட செயல்வழிக் கற்றல் முறையைப் பின்பற்றுவதற்கான பயிற்சிகள் தன்னார்வலர்களுக்கு அளிக்கப்படவிருக்கின்றன. ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் வாரம் ஒருமுறை சந்தித்து உரையாட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வளவு மெனக்கிடலைப் பள்ளி ஆசிரியர்களை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கலாமே என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது” என்றார்.

தமிழகப் பள்ளிக் கல்வி தொடர்பாக, ஆசிரியர்கள் போதாமை தொடங்கி கல்வி நிலையங்களுக்கு உள்ளேயும் சுற்றிலும் அநேகச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. இந்நிலையில், ’மக்கள் பள்ளி’ திட்டத்துக்கு வெளியே தொண்டர்களைத் தேடுவதற்குப் பதிலாகக் கடந்த 9 ஆண்டுகளாகச் சொற்ப ஊதியத்துக்கு உழன்றுகொண்டிருக்கும் பகுதிநேர ஆசிரியர்களை, முதல்கட்டமாக நிரந்தரப்படுத்தலாமே என்ற குரலுக்கும் அரசு செவிமடுக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE