தமிழக அரசு பள்ளிகளில் ‘ஹை-டெக் லேப்’ வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு - குற்றச்சாட்டும் பின்னணியும்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: தமிழகம் முழுவதும் 8,209 அரசுப் பள்ளிகளில், அதிநவீன வசதிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில், நிர்வாகம் மற்றும் பயிற்றுநர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய ஆன்லைன் மூலம் 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டது.

மே 29-ல் ஸ்கிரீன் டெஸ்ட் எனப்படும் நுழைவுத் தேர்வும், அதைத்தொடர்ந்து, ஜூன் 6-ம் தேதிகணினி அடிப்படைத் தேர்வும் நடத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலான இடங்களில் 2-ம் கட்ட தேர்வை எழுதவிடாமல், கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகளான திருவாரூர் தேன்மொழி, கள்ளக்குறிச்சி சக்கரவர்த்தி, கன்னியாகுமரி வினித் ஆகியோர் கூறியது: இந்தப் பணியிடத்துக்கு முதல்கட்ட தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற 2-ம் கட்ட தேர்வு, அரசுப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் நடத்தப்பட்டது.

தேர்வெழுதச் சென்ற கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகளை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. மாறாக, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்க முடியும் என்று கூறிவிட்டனர். இது, இந்தப் பணியை எதிர்நோக்கியிருந்த எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

உரிய கல்வித்தகுதி இல்லாதவர்களை, கணினி ஆய்வகத்தில் பணி நியமனம் செய்வதன் மூலம் இந்தத் திட்டத்தின் நோக்கம் முழுமை பெறுமா என்றகேள்வி எழுந்துள்ளது. எனவே, 2-ம் கட்ட தேர்வை ரத்து செய்து, கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகளுக்கு தேர்வு நடத்தி, தகுதியான ஆட்களைத் தேர்வு செய்து, நியமனம் செய்ய வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்., வேலையில்லாபட்டதாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் குமரேசன் கூறியது: தமிழகத்தில் கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகள் தொடர்ந்து அரசுப் பள்ளி பணிகளில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தின் கீழ், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகள் பணி நியமனம் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால்,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்ற பாடப் பிரிவுகளுக்கு நடத்தப்பட்ட நிலையில், கணினி அறிவியல் பாடத்துக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்படவில்லை.

இதைத்தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, சங்கத்தின் சார்பில் அணுகியபோது, அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் நிர்வாகம் மற்றும் பயிற்றுநர் பணிக்கு கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள் என வாய்மொழியாக உத்தரவாதம் அளித்தார்.

இதையடுத்து, தமிழகத்தில் 10,000-க்கும் அதிகமான கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகள் குறித்த விவரத்தை பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்கினோம். இந்நிலையில், இல்லம் தேடிகல்வித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு மட்டும் தேர்வு குறித்த அறிவிப்புகளை அனுப்பி உள்ளனர். ஆனால், கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகளை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனையாக உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, ஏற்கெனவே எங்களுக்கு அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றும் வகையில், அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்துக்கு கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE