அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மட்டுமே ‘நீட்’: ஆசிரியர் சொல்லும் ஆக்கபூர்வ யோசனை!

By கரு.முத்து

தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா? அதற்குப்பிறகு, குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் கிடைக்குமா? என்பதெல்லாம் மாணவர்களுக்கு தெரியாத, மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

இந்நிலையில் நீட் தேர்வு குறித்த விவாதங்களையும், மத்திய அரசுடனான கருத்து மோதல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு வேறு வழியில் மாணவர்கள் நலன் காப்பதற்கான யோசனைகளை முன்வைக்கிறார், திருச்சியைச் சேர்ந்த ஆசிரியர் ‘சிகரம்’ சதீஷ்குமார்.

இந்த சதீஷ்குமார், தற்போதிருக்கும் தேர்வு முறையை மாற்றவேண்டும், பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகும் ஆசிரியர், அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்வதுடன், அவர்களது பணப்பயன்களையும் நிறுத்திவைக்க வேண்டும் என்பதுபோன்ற முற்போக்குச் சிந்தனைகளை அரசிடம் கோரிக்கையாக வைத்திருப்பவர். நீட் தேர்வு விவகாரத்திலும் மாணவர்களுக்கு பயனுள்ள, சமரசமான சில செயல்பாடுகளை முன்வைத்திருக்கிறார். இனி அவர் சொல்வதைக் கேட்கலாம்...

’’தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்னும் வாக்குறுதியோடு தேர்தலை சந்தித்தது திமுக. தேர்தலில் பெருவெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் ஏறிய சில நாட்களிலேயே நீட் தேர்வு குறித்து ஆராய, ஓய்வுபெற்ற நீதியரசன் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. ஆனாலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உடனடியாக இல்லாத நிலையில், தற்போது தேர்வும் நாடெங்கிலும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

சதீஷ்குமார்

வழக்கமாக தொடர் வகுப்புகள், தொடர்ச்சியான பயிற்சி இவையெல்லாம் இருந்த காலகட்டத்திலேயே அரசுப்பள்ளி மாணவ - மாணவியர் தேர்வை சந்திக்க சிரமப்பட்டார்கள். ஆனால், தற்போது கரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிக்கூடம் செல்வதற்குரிய சூழல் இல்லை. அதேநேரத்தில் எப்படியும் நாங்கள் ரத்து செய்துவிடுவோம் என்கிற நம்பிக்கையை மாணவர்களுக்கு, புதிதாக பதவியேற்ற திமுக அரசு கொடுத்துக்கொண்டே வந்தது. கடைசியில் அதற்கு வாய்ப்பில்லை என்ற சூழலில் தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தத் தேர்வை இந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்தித்திருப்பதில் மிகப்பெரிய சிக்கல் எழுந்திருக்கிறது. அரசுப்பள்ளி, தனியார் பள்ளி என இரண்டு பக்கமுமே கடந்த ஓராண்டாக பள்ளிகள் திறக்கப்படாததால் வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன. இந்த மாணவர்களுக்கு பாடம்சார் அறிவும் அவ்வளவு சிறப்பாக அமையப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையிலும் அவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளார்கள்.

ஆனால் இன்னொருபுறம், கடந்த வருடமும், அதற்கு முந்தைய வருடமும் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, இரண்டு வருடத்திற்கு மேலாக நீட்டுக்காக மட்டுமே தங்களைத் தயார்படுத்திக்கொண்ட மாணவர்களும் நீட்தேர்வு எழுதியிருக்கிறார்கள். இவர்களோடு அவர்கள் போட்டியிடும்பொழுது, நேரடி 12-ம் வகுப்பு மாணவர்களுடைய வாய்ப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகி விடும் என்பதுதான் உண்மைநிலை. அது பெருங்கவலை அளிக்கக்கூடியது.

ஆனால், மாநில அரசு நினைத்தால் அந்தக்கவலையை போக்கிவிட முடியும். அதற்கு ஒரு எளியவழி இருக்கிறது. அந்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய விதத்தில் தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இருக்கக்கூடிய 7.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக 15 சதவீதமாக அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்.

நீட் தேர்வு முடிவு வருவதற்குள் தமிழ்நாடு அரசு இதை அறிவிக்க வேண்டும். அத்தோடு, நடப்பு ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மட்டும் என ஒரு குறிப்பிட்ட சதவீதத்தையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, 12-ம் வகுப்பை முடித்துவிட்டு, நீட் எழுதியவர்கள், பல வருடங்களாக நீட்டுக்காக பயிற்சி எடுத்த மாணவர்களுடன் போட்டியிட முடியும்.

நீட் தேர்வு விஷயத்தில் மத்திய - மாநில அரசுகள் இன்றுவரை சரியான நிலைப்பாட்டை எடுக்க முடியாத சூழலில் சட்ட வடிவிலான சிக்கல்களும், மத்திய - மாநில அரசுகளுக்கிடையே ஓர் இணக்கமற்ற சூழலும் தொடர்ந்து நிலவி வருகின்றது. தேசிய அளவில் நடைபெறும் ஒரு தேர்வு தமிழ்நாட்டிற்குக் கூடாது என்பதாக இதை அணுகாமல், அது மாநிலத்தின் உரிமையைப் பாதிக்கக் கூடாது என்னும் நிலையில் நம் மாநில அரசு இந்த விஷயத்தைக் கையாள்வதே சரியாக இருக்கும்.

இதற்கு சட்டரீதியான ஒரு வழிமுறையை செய்துகொள்ள வேண்டும். நீட் தேர்வையே வேண்டாம் என்று சொல்வதைவிட, அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவீத இடங்களுக்கு மட்டும் எங்கள் மாநிலத்தில் நீட்தேர்வை நடத்திக்கொள்கிறோம். ஆனால் மாநில உரிமையான மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில அரசே சேர்க்கை குறித்து இறுதி முடிவெடுக்கும். இதில் மத்திய அரசு தலையீடு செய்யக் கூடாது என நீதிமன்ற ஆணை பெறுவது ஒன்றே சரியான இறுதியான தீர்வாக அமையும்.

இவற்றை இப்போதே செய்துவிட்டால் நம் மாணவர்களின் உரிமையும் பாதிக்காது, உயிர்களும் பறிபோகாது. அதனால் இதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகளைக் கலந்துபேசி நம் முதல்வர் செயல்படுத்த முன்வர வேண்டும். இது உடனடித் தேவை மட்டுமல்ல.. உறுதியான தேவையும் ஆகும்” என்கிறார் சதீஷ்குமார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE