நம் கண்மணிகளின் கண்பார்வையை டிஜிட்டல் கல்வி முறை பாதிக்கலாமா?

By ம.சுசித்ரா

கரோனா காலத்தில், ஆன்லைன் கிளாஸ் ஆரம்பமானதில் தனியார் பள்ளியில் 6-வது படிக்கும் பிரியாவுக்குச் சிக்கல் இல்லை. அவளுக்கென வீட்டில் ஒரு லேப்டாப், அதிவேக இணைய வசதி வாய்த்திருந்தது. வேளாவேளைக்கு ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் நடத்தினார்கள். அவளும் படிப்பில் சுட்டியென்பதால், முதல் ஆளாகவே வீட்டுப்பாடங்களையெல்லாம் எழுதிவிடுவாள். அவற்றை வகுப்பு வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிடுவாள். வகுப்பாசிரியை நட்சத்திரம், கைதட்டல், ரோஜா பூ என எமோஜிக்களை வாரி வழங்கினார்.

நாளடைவில் பிரியாவுக்குத் தலைவலி வந்தது. வழக்கமாக 10 மணிக்குத் தூங்கி காலை 6 மணி எழுபவள், இரவில் தூக்கம் வராமல் லேப்டாப்பில் ஓடிடி-யில் படம் பார்க்க ஆரம்பித்தாள். நடுநிசி 12 மணியானாலும் உறக்கம் வராமல் தம்பியிடம் வம்பிழுத்துக்கொண்டிருந்தாள். காலை 9 மணி வகுப்புக்கு 8:30-க்குதான் விழித்தாள். இப்போதெல்லாம் படிக்கும்போது கண்ணைக் கசக்கிக்கொண்டே இருக்கிறாள். எப்போதுமே சுறுசுறுப்பாக ஓடி ஆடுவதில் நாட்டமுள்ளவள், ஒரே இடத்தில் பல மணிநேரம் உட்காரப் பழகிப்போனாள். சலிப்படையும் போதெல்லாம் நொறுக்குத் தீனிகளைக் கொறித்தாள். முதலில் கண்ணுக்குத் தெரியாமல் உடல் எடை அதிகரித்தது. கொஞ்ச நாளாகப் பருமனாகத் தோற்றம் அளிக்கிறாள். திடீரென பருவமடைந்துவிட்டாள். செய்வதறியாமல் அவளது பெற்றோர் கவலை கொண்டனர்.

நேரடியாகவும் மறைமுகமாகவும்!

“இவ்வளவு சிக்கல்களும் வெறும் 11 வயதான பிரியாவுக்கா? நம்ப முடியவில்லையே!” என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அத்தனைச் சிக்கல்களும் ஒரே குழந்தைக்கு இல்லாமல் போகலாம்.

ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டில் ஆயிரக்கணக்கான தளிர்களுக்குப் பார்வைக் கோளாறு ஏற்படத் தொடங்கி இருக்கிறது என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை. அமைதியான சுபாவம் கொண்ட சிறுவர்கள்கூட, அதிகம் முரண்டு பிடிப்பதையும் உடன் பிறந்தவர்களுடன் சண்டை பிடிப்பதையும் பார்க்கிறோம். கொஞ்சம் பூசினாற்போல உடல்வாகு கொண்ட பல குழந்தைகளுக்கு மளமளவென உடல் எடை கூடிப்போனதைக் கவனிக்கிறோம். சிறுமிகள் எதிர்பாராத விதமாகப் பருவம் எய்துவதைக் கண்டு பதைபதைக்கிறோம். இவை அனைத்துக்கும் ஆன்லைன் வழிக் கல்வி முறைக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

பாதிக்கப்பட்ட குழந்தைகள்!

அதிவேக இணைய வசதியுடன் கூடிய கணினியோ அலைபேசியோ இல்லாத குழந்தைகளுக்கு, ஆன்லைன் வழி கல்வித் திட்டம் எப்படி சாத்தியம் என்ற கேள்வியைத் தொடர்ந்து எழுப்பிவருகிறோம். ஆனால், இந்த வசதிகள் அனைத்தும் கைகூடிய குழந்தைகளுக்கும் அதீத டிஜிட்டல் பயன்பாட்டால் பாதகங்கள் நேர்ந்துள்ளன.

கரோனா பெருந்தொற்று காலத்தில் வீடடங்கி இருத்தல் அவசியமானது. இதனால் நம் வீட்டுக் குழந்தைகள் வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. வீட்டுக்குள் இருக்கும்போது தானாகவே மொபைல், தொலைக்காட்சி பார்க்கும் நேரம் அதிகரித்துவிட்டது.

உத்தர பிரதேச தலைநகரம் லக்னோவில் உள்ள ஸ்பிரிங் டேல் கல்லூரிக் குழுமத்தைச் சேர்ந்த பள்ளியின் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். ஆன்லைன் வகுப்புகள் 55 சதவீத குழந்தைகளின் மனநலம், கண்பார்வை உள்ளிட்ட உடல்நலனையும் பாதித்திருப்பதாக அந்த ஆய்வின் முடிவுகள் அதிரவைத்தன. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகள் பலவற்றில் இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. ஆனால், தமிழகத்தில் இந்த கோணத்தில் ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாக அறியப்படவில்லை.

சு.ராம் சுந்தர்

குழந்தைகளும் குண்டாக இருப்பது ஆரோக்கியமல்ல!

‘இன்று தற்காலிகப் பிரச்சினையாகத் தோன்றுவது எதிர்காலத்தில் நிரந்த உடல் உபாதையாக உருமாறும் ஆபத்துள்ளது’ என்று எச்சரிக்கிறார் குழந்தை நல மருத்துவர் சு.ராம் சுந்தர். இத்தகைய சூழலில், சில அறிகுறிகளை வைத்து குழந்தைகளுக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்று அவரே அவற்றை விளக்கினார்.

“தங்களுக்கு ஏற்படும் உடல், மனச் சிக்கலை எடுத்துச்சொல்ல சிறுவர்களுக்குத் தெரியாது. வழக்கத்தைவிட நேரம் கடந்து தூங்கினால், எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தால் மனச்சோர்வுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகள் கொழுகொழுவென இருப்பதைக் கண்டு மகிழும் வழக்கம் இந்திய பெற்றோருக்கு உள்ளது. குண்டாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்றுகூட நம்புகிறார்கள். மருத்துவர்கள் எடை குறித்து எச்சரித்தாலும் அதைப் பலர் பொருட்படுத்துவதே இல்லை. இது தவறான நம்பிக்கை. குழந்தைப் பருவத்தில் குண்டாக இருப்பவர்களுக்குப் பிற்காலத்தில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயமுள்ளது. பெண் குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைவது மட்டுமல்லாமல் கர்ப்பப்பையில் கட்டி, முகப்பரு, மாதவிடாயில் ஒழுங்கின்மை ஏற்படலாம். இதனால் கருத்தரிப்பதில்கூட சிக்கல் உண்டாகலாம்” என்றார் ராம் சுந்தர்.

காயத்ரி

கண்ணுக்கும் தண்ணீர் தேவை!

தொடர்ச்சியாக டிஜிட்டல் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அதிகமாகப் பாதிக்கப்படுவது கண்பார்வையே. இது பற்றி, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையின் கண் மருத்துவர் மற்றும் கருவிழி நிபுணரான காயத்ரியிடம் கேட்டபோது, “தொடர்ந்து கணினி திரையையோ அலைபேசியையோ பார்த்துக்கொண்டிருக்கும்போது கண்களை இமைக்கவே மறந்துவிடுவோம். அதிலும் குளிரூட்டப்பட்ட ஏசி அறையில் நெடுநேரம் இருந்தால் கண்களில் உள்ள ஈரப்பதமும் வற்றிப்போகும். இதனால் கண்கள் உலர்ந்துபோகும், அரிப்பு உண்டாகும், சிவந்துபோகும், தலைவலி உண்டாகும். நாளடைவில் கிட்டப்பார்வை பிரச்சினை ஏற்படலாம்.

ஆன்லைன் கல்வி என்பது தவிர்க்க முடியாமல் இருக்கும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது உதவும். கணினியோ அலைபேசியோ ஒரு கை அடி தொலைவில் இருக்க வேண்டும். தலையை நிமிர்ந்து பார்க்கும் வகையில் அல்லாமல் கொஞ்சம் தலையைத் தளர்த்திக் கீழே பார்க்கும்படியாக ஸ்கிரீன் இருக்க வேண்டும். முக்கியமாக, வெளிச்சமான அறையில்தான் டிவி, மொபைல், கணினியைப் பார்க்க வேண்டும். இருட்டில் டிஜிட்டல் திரையைப் பார்ப்பது கண் பார்வையைக் கடுமையாகப் பாதிக்கும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 நொடிகள் 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை சாவகாசமாகப் பார்ப்பதை வழக்கப்படுத்திக்கொள்வது நல்லது. முதுகெலும்பை வளைக்காமல் சவுகரியமான நாற்காலியில் உட்கார்ந்து படிப்பதும் முக்கியம். ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை கோப்பை தண்ணீர் பருகுவதும் கண்களுக்கு அவசியம்” என்றார்.

நித்யா சுந்தர்

தலைகீழ் வகுப்பறையே தீர்வு!

பள்ளி திறக்க முடியாததால், எப்படியாவது பாடம் கற்பித்துவிட வேண்டும் என்று ஆன்லைன் வகுப்பெடுக்க ஆசிரியர்கள் அவசரப்படுவதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. குழந்தைகளின் கல்வி தடைபடுவது குறித்து பெற்றோருக்கும் ஆதங்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், கடைசியில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், ஆன்லைன் கல்வியை மாணவர்களுக்கு இணக்கமான முறையாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருபவரான நித்யா சுந்தரத்திடம் பேசினோம். கோவையைச் சேர்ந்த சி.எஸ். அகாடமி குழுமப் பள்ளிகளின் கல்வித் துறை இயக்குநரும் ஆசிரியர் பயிற்றுநருமான இவர் நேரடி வகுப்பறைக்கு ஆன்லைன் கல்வி ஒருபோதும் ஈடாகாது என்பதை ஒப்புக்கொண்டார். அதேநேரம் டிஜிட்டல் கல்வி என்பது தற்காலிகமாகக் கைகொடுக்கக்கூடியதாக இருக்கிறது. அதைக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாகவும் சுவாரசியமானதாகவும் மாற்றும் வழிகளைப் பகிர்ந்துகொண்டார்.

“ஆசிரியரே பேசிக்கொண்டிருப்பது கற்பித்தலாகாது. அதில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். அதற்கு இந்தக் காலகட்டத்தை முறையாக ஆசிரியர்கள் பயன்படுத்தலாம். Flipped classroom என்பார்கள். வழக்கமான வகுப்பறையை தலைகீழாகப் புரட்டிப்போடுவதுதான் அது. அப்படி ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்பெடுப்பதைக் குறைத்துக்கொண்டு மாணவர்களுக்குச் சோதனைகள் மூலமாகப் பாடங்களைப் புரியவைக்கலாம். சமையலறையும் வீட்டு வேலைகளுமே கணிதம், அறிவியல் பாடங்களைப் படிக்க கைகொடுப்பவை.

உதாரணத்துக்கு, முட்டையைக் கொதிநீரில் வேகவைப்பது மூலமாக 100 டிகிரி செல்சியஸ் கொதிநிலையை எளிதில் விளக்க முடியும். புள்ளி வைத்த கோலத்தைவிடவும் ஜியாமெட்ரியை எளிதில் விளக்க வேறென்ன இருக்க முடியும்? துணி துவைக்கும் சோப்புத் தூளில் உள்ள மூலக்கூறுகளைத் தெரிந்துகொள்வதை வேதியியலுக்கான அரிச்சுவடியாக மாற்றலாமே. இதேபோல வீட்டைச் சுற்றியுள்ள செடி, கொடிகளை உற்று நோக்குவதன் மூலம் தாவரவியலை அறிமுகப்படுத்தலாம். இப்படி கூடுமானவரை குழந்தைகளை அன்றாட வாழ்க்கையைப் படிக்கக் கற்பிக்கலாம். வீட்டு வேலைக்கும் படிப்புக்குமான தொடர்பை உணர்த்தலாம். இந்த முயற்சியில் பெற்றோரின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்” என்றார் நித்யா சுந்தர்.

இரண்டாண்டுகள் முன்புவரைகூட குழந்தைகள் அலைபேசியைப் பயன்படுத்துவது அவர்களது கண் பார்வையை மட்டுமல்ல, மூளை வளர்ச்சியையே பாதிக்கும் என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. படிப்பு, பொழுதுபோக்கு எதுவானாலும் சரி 12 வயதுவரை நாளொன்று 2 மணிநேரத்துக்குக் கூடுதலாக டிஜிட்டல் திரையைப் பார்க்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. சொல்லப்போனால் கரோனா தொற்று தொடங்கியதும் இவற்றை மனதில் நிறுத்தி, ஆன்லைன் வகுப்புகளுக்கான கால அவகாசத்தை வயதுவாரியாக அறிவித்தது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். ஆனால், பள்ளிகளின் அந்தஸ்து உயர உயர இந்த நெறிமுறைகளை அவை ஒரு பொருட்டாக மதித்துப் பின்பற்றுவதில்லை என்பதுதான் கள நிலவரம். இனியேனும் இந்த அவல நிலை மாறட்டும். நம் கண்மணிகளின் உடலும் மனமும் நலம் பெறட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE