தற்கொலைகளுக்கு நாமே பொறுப்பேற்போம்!

By எஸ்.எஸ்.லெனின்

சில தினங்களுக்கு முன்புதான், தற்கொலை தடுப்பு தினத்தை (செப்டம்பர் 10) உலகம் மிகுந்த கவலையுடன் அனுசரித்தது. இடைப்பட்ட தினங்களில், தமிழகத்தில் மட்டும் மாணவப் பருவத்தினர் பலர் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்ட செய்திகள் வெளியாகி அதிர வைக்கின்றன.

தற்கொலை என்பதன் பின்னிருக்கும் அரசியல், சமூக, பொருளாதார, சட்ட ரீதியிலான காரணங்களும், விவாதங்களும் பெரிதாக கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. அது ஒருபுறம் இருக்கட்டும். இனியொரு உயிர் பறிபோகாதிருக்க, தனி மனிதராய் நாமனைவரும் கரம்கோர்த்து செய்ய வேண்டியது என்ன என்பதை உணர்ந்து கொள்வதும் இந்த இக்கட்டான தருணத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

சமிக்ஞைகள் அறிவோம்

ஒருவர் தனது உயிரை போக்கிக்கொள்ளும் அளவுக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் எனில், அவரிடமிருந்து வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சில சமிக்ஞைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களால் அந்த அறிகுறிகளையும் அதன் செய்திகளையும் அடையாளம் காண முடியும். இயல்பு வாழ்க்கை குலைந்திருப்பார்கள், பேச்சில் விரக்தி இருக்கும். தோல்வி குறித்தான கவலையை பகிர்ந்திருப்பார்கள். வெற்றி பெற்றவர்களுடன் ஒப்பீடு செய்திருப்பார்கள். எதிர்காலம் குறித்து அச்சமும் கவலையும் தெரிவிப்பார்கள். சதா தனிமையிலே முடங்குவார்கள். இப்படியான அறிகுறிகள் ஒன்றிரண்டு தென்பட்டால், உடனடியாக அவரை அரவணைத்து தேற்றுவது அவசியம். தேற்றுவது என்றால் வளவளவென அறிவுரைகள் கூடாது. அவரின் கவனத்தை மடைமாற்றும் வகையில் பிடித்த விஷயங்கள், பொழுதுபோக்குகள், மனிதர்கள் என உடன் சேர்க்க வேண்டும்.

தனிமை தற்கொலையின் தோழன்

மனமுடைந்தவர்கள் தனிமையில் இருக்க அறவே வாய்ப்பளிக்கக்கூடாது. தற்கொலை எண்ணத்தில் தீவிரமானவர்களுக்கு தனிமையே தூண்டுகோலாகி விடும். அவரது அச்சத்தையும், விரக்தியையும் அதுவே தீவிரமாக்கும். எனவே மனச்சோர்வு, மன அழுத்தம் கொண்டவர்கள், தோல்வி அடைந்ததாக மனம் உடைந்தவர்கள் ஆகியோரை அந்த மனநிலையில் இருந்து மீளும் வரை தனிமையிலிருக்க அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு உறுத்தாதவகையிலும் இயன்றால் உறுதுணையாகும் வண்ணம் நமது இருப்பு அமைந்திருக்க வேண்டும். நாள் செல்லச் செல்ல மன அழுத்தம் நீர்த்துப்போகும்போது அல்லது உரிய ஆலோசனையும், தெளிவும் கிட்டும்போது அவர்கள் தற்கொலை மனப்பான்மையின் பிடியிலிருந்து விடுபட்டு விடுவார்கள். அதுவரை தனிமையே அவர்களுக்கு எமன் என்பதை மறந்துவிடக்கூடாது.

தற்கொலை எண்ணம் ஓர் ஒட்டுவாரொட்டி

தற்கொலை எண்ணம் என்பது தனிப்பட்ட ஒரு நபருக்கு தானாக உதிப்பதை விட, வெளியிலிருந்து தொற்றும் ஒட்டுவாரொட்டியைப் போல ஒட்டிக்கொள்வதே அதிகம் நடக்கிறது. குடும்பத்தில், குடியிருப்பில், நட்பில், உறவு வகையில் என எப்போதோ நடந்த தற்கொலை சம்பவங்கள், சற்று கிலேசமான மனப்பக்குவம் கொண்டவரை அவரையும் அறியாது ஆழப் பாதித்திருக்கும். காத்திருந்து சரியான தருணத்தில் தன்னை வெளிப்படுத்தவும் செய்யும். அல்லது பிரியமானவர்களை அம்மாதிரி தற்கொலைக்கு பறிகொடுத்தவர்களும் பின்னொரு தருணத்தில் அவற்றை பரிசீலிக்கவும் முன்வருவார்கள். எனவே, அதுபோன்ற சூழல்களை ஆராய்ந்து சம்மந்தப்பட்டவரை காக்க வேண்டியது குடும்பத்தார் கடமை.

வேண்டாமே உதாசீனம்

ஒரு சிலர் பேச்சுவாக்கில் தற்கொலை குறித்தோ அதற்கு ஒப்பான முடிவுகள் குறித்தோ, அவ்வப்போது தமது உள்ளக்கிடக்கையை தாமே அறியாது வெளிப்படுத்தி விடுவார்கள். வேறு சிலர் விரக்தியின் உச்சத்திலும், விரும்பியது கிடைக்காத வெறுப்பிலும் மிரட்டலாகவும் கூட குடும்பத்தில் தெரிவிப்பார்கள். அவற்றில் எதுவுமே அலட்சியப்படுத்துவதற்கு அல்ல. மிரட்டல் விடுப்பவரிடம் வெளிப்படையாக எதிர்வினை ஆற்றாது போனாலும் உள்ளுக்குள் எச்சரிக்கை மணியடிக்க கூடுதலாக காபந்து காட்ட வேண்டும். தோல்வி பயத்தில் இருக்கும் மாணவர்களுக்காகவே, 104 என்ற ஆன்லைன் சேவை மூலம் ஆற்றுப்படுத்துதலை தருகிறது அரசு.

நேர்மறை அணுகுமுறையாக பிரச்சினைக்கான தீர்வு குறித்து அமர்ந்து பேசி கலப்பதும், தீர்வை நோக்கி அடியெடுத்து வைப்பதும் தற்கொலை எண்ணங்களை சிறிது சிறிதாக தகர்க்கும். ஒரு சிலர் தற்கொலை முயற்சிகளில் இறங்கி மீட்கப்பட்டவராக இருப்பார்கள். நாமே அறியாது அதில் தோற்றவராகவும் இருப்பார்கள். அப்படியானவர்களை, ஐயத்துக்கு உரியவர்களை இன்னும் தீவிரமாக கண்காணிப்பதும், அரவணைப்பதும், மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்துவதும் முக்கியம். மனநல நோய்களில் ஒன்றாக தற்கொலை எண்ணமும் பீடித்திருப்பதை மருத்துவ ஆலோசனையில் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டும்

ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறார் எனில், அதற்கான பழியை அவரது குடும்பத்தாரும், சமூகமும் அதன் பின்னர் சுமக்க வேண்டியதாகிறது. எனவே, இந்தப் பழியை தவிர்க்கும் பொருட்டும் குடும்பத்தாரும், சமூகமும் சில சுதாரிப்புகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எல்லோருக்கும் சாத்தியமானதில்லை. ஒரு வகுப்பில் பயிலும் எல்லா மாணவர்களும் முதல் மதிப்பெண் எடுக்க முடியாது. ஓரிருவர் தவிர்த்து பெரும்பாலானோர் மருத்துவராகவோ, ஐஏஎஸ் ஆகவோ உருவாக முடியாது. அவரவருக்கான திறமைகள், ஆர்வங்கள், அபிலாஷைகளைப் பொறுத்தே படிப்பும், பணியும், எதிர்காலமும் தகையும். உலகில் பிறப்பெடுத்த எவருமே மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. ஒருவரது தனித்திறமைகள், ஆர்வங்களை அறியாது அவர் மீதான சுற்றத்தாரின் திணிப்புகளே பின்னாளைய தோல்விமுகத்துக்கு காரணமாகின்றன.

எனவே, வளரும் குழந்தைகளை கரிசனத்தோடு வளர்ப்போம். நமது வெற்றிகளை பீற்றல்களாக பறைசாற்றுவதோடு, அடைந்த தோல்விகள் அவற்றிலிருந்து மீண்டுவந்த பாடங்களையும் பகிர்ந்துகொள்வோம். இளம் வயதினருக்கு அவ்வப்போது தோல்விகளும் பரிசாகக் கிடைக்க வாய்ப்பளிப்போம். தோல்விகள், ஏமாற்றங்கள், வேதனைகள் என எதிர்மறைகளும் வாழ்வின் அங்கமே என புரிய வைப்போம். முக்கியமாக அக்கறையின் பெயரிலான குதர்க்க விசாரிப்புகளை தவிர்ப்போம்.

மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டும். தற்கொலைக்கு ஆளானவர் இந்த உலகை விட்டு பிரிந்திருப்பார். ஆனால், முறையாக அரவணைக்காது, பாராமுகத்தோடும், இகழ்ச்சியும், எதிர்மறையுமாக அவர்களை தற்கொலைக்கு நெட்டித் தள்ளியதற்கான பழியை நாம் நமது எஞ்சிய வாழ்க்கை நெடுக சுமக்க வேண்டுமா? யோசிப்போம். பெயரளவில் தற்கொலை என்றபோதும் அவை சமூகத்தின் கொலைகளே. இனியொரு உயிர் தற்கொலை மனப்பான்மையில் சறுக்காதிருக்க சற்று மனது வைப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE