நீட் தேர்வு: புகைப்படம் இல்லாமல் தவித்த மாணவிக்கு உதவிய போக்குவரத்து எஸ்.ஐ

By காமதேனு டீம்

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் தனது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இல்லாமல் நீட் தேர்வு எழுத வந்த மாணவியை, 5 கி.மீ தூரம் தனது பைக்கில் அழைத்துச்சென்று புகைப்படம் எடுத்துக்கொடுத்து உதவிய போக்குவரத்து உதவி ஆய்வாளருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே, நேற்று தமிழகம் முழுதும் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் 33 தேர்வு மையங்களில் 17,992 பேர் தேர்வு எழுதினர்.

கீழ்ப்பாக்கத்தில் நீட் தேர்வு மையமாகத் தேர்வுசெய்யப்பட்டிருந்த தனியார் பள்ளி ஒன்றின் அருகே, நேற்று (செப்.12) போக்குவரத்துப் பணியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோ ஈடுபட்டிருந்தார். அப்போது வாகனங்கள் வருகை குறைவாக இருந்ததால் நீட் தேர்வு மையம் அருகே சென்ற அவர், அங்கு தேர்வு எழுத வந்திருந்த மாணவ - மாணவிகளுக்கு உதவ முன்வந்தார். தேர்வு எழுத 15 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டுவது என்பன உள்ளிட்ட உதவிகளைச் செய்தார். தேர்வு பரபரப்பில் பதற்றத்துடன் காணப்பட்ட மாணவ - மாணவியருக்குத் தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொடுத்து பதற்றத்தைத் தணிக்க உதவினார்.

நீட் தேர்வு சற்று நேரத்தில் தொடங்க இருந்த நிலையில் மாணவி ஒருவர், தனது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வீட்டிலேயே மறந்துவிட்டு வந்ததாகப் புலம்பிகொண்டிருந்தார். அதைப் பார்த்த உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோ உடனடியாகத் தனது இருசக்கர வாகனத்தில் மாணவியை அழைத்துக்கொண்டு அருகே இருந்த போட்டோ ஸ்டுடியோவுக்குச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு பல கடைகள் மூடி இருந்தன. உடனே அங்கிருந்து சுமார் 5 கி.மீ தூரம்வரை பயணித்து மாணவிக்குப் புகைப்படம் எடுத்துக் கொடுத்து, பின்னர் அந்த மாணவியைச் சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு அழைத்து வந்தார். தக்க சமயத்தில் உதவி புரிந்த உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோவுக்கு மாணவி நன்றி தெரிவித்தார். மேலும், முதன்முறையாகத் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு உறுதுணையாகக் கடைசி நிமிடம்வரை அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தேர்வர்கள் உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோவை வெகுவாகப் பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE