ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஆதரவாக 14-ம் தேதி போராட்டம்

By காமதேனு டீம்

ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து செப்டம்பர் 14-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என இளைஞர், மாணவர் பெருமன்றத்தினர் அறிவித்துள்ளனர்.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து, வரும் 14-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அனைத்திந்திய இளைஞர், மாணவர் பெருமன்றத்தினர் அறிவித்துள்ளனர். அம்மன்றத்தின் நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் மாணவர் பெருமன்ற மாவட்டத் தலைவர் ஜெ.பி.வீரபாண்டியன் தலைமையில் இன்று (செப்டம்பர் 11) நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி (Diploma in Teacher Education) படிப்பில் தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த மாணவர்களின் தேர்வு முடிவுகளில் கடந்த 3 ஆண்டுகளில் வெறும் 2% பேர் கூட தேர்ச்சி பெறவில்லை. விடைக்குறிப்பு (Answer Key) அடிப்படையில் விடைத்தாள் திருத்தும் நடைமுறை ஆசிரியர் படிப்பில் இல்லாதபோது இது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதால் இந்நிலை தொடர்கிறது.

தேசியக் கல்விக் கொள்கையும் இதற்குக் காரணமாக உள்ளது. ஏனெனில், ஆசிரியர் பட்டயப் பயிற்சிப் படிப்பை தேசிய கல்விக் கொள்கை(NEP) முற்றிலுமாக ஒழித்துக்கட்டவே வலியுறுத்துகிறது. இத்தகைய மோசமான நெருக்கடிகளால்தான் கடந்த சில ஆண்டுகளாக இப்படிப்பில் மாணவர்கள் சேர்வதே இல்லை. மாணவர் சேர்க்கை குறைந்து கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுவருகின்றன.

இதுபோன்ற பிரச்சினைகளைச் சரி செய்யாமல், போதுமான கால அவகாசம் வழங்காமல் அவசர அவசரமாகத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்றுவருகின்றன. மாணவர்கள் தேர்வுகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பைப் பாதுகாத்திட வேண்டும், ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்துவதில் பழைய நடைமுறையையே தொடர்ந்திட வேண்டும்.

அரசு நிறுவனமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மீண்டும் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும். அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்வுகளை ரத்து செய்து, ஒரு மாத காலம் நேரடி வகுப்புகள் நடத்தி தேர்வுகளை நடத்திட வேண்டும்.

பழிவாங்கும் நோக்கில் ஆசிரியர்களுக்குக் கொடுத்த 17B தண்டனையை வாபஸ் வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தி வரும் 14-ம் தேதி ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தேர்வு எழுதும் மையமான மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் பெருந்திரள் போராட்டத்தை நடத்துவது.

என கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE