எழுத்தறிவு நாளை முன்னிட்டு, மூத்த கல்வியாளர் ச.மாடசாமி அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இட்ட பதிவு இது:
இன்று - பள்ளி, கல்லூரி பாடப் புத்தகம் வலதுசாரிகளின் ஆதிக்கத்தில் இருக்கிறது; வகுப்பறையோ மனிதனை அக்கு அக்காகப் பிரித்து அடையாளங்களை ஒட்டும் ‘புதிய மதமாகி’ இருக்கிறது.
பல நாடுகளிலும் வரலாற்றுப் பாடப் புத்தகங்களின் நிலை மிகப் பரிதாபம்!
அந்தந்த நாடுகளில் பாகுபாடுகளுக்கு எதிராக நடந்த போராட்டங்களையும், போராட்டங்களில் பலியானோர் தியாகங்களையும் பாடப் புத்தகங்களில் மறைக்க, வலதுசாரிகள் தவியாய்த் தவித்து வருகிறார்கள். வரலாற்றை மறைப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த ‘தேச பக்தி’!
2 ஆண்டுகளுக்கு முன், தமிழ்ப் பாடநூல்களில் குவிந்து கிடந்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் கொஞ்சம் குறைக்கப்பட்டு, இயற்கை வர்ணனைப் பாடல்கள் சேர்க்கப்பட்டன. உடனே, கடவுள்களுக்கு ஆபத்து வந்தது போல சிலர் கதறியதும்,பத்திரிகைகள் சில பதைபதைத்துச் செய்தி வெளியிட்டதும் ஞாபகத்துக்கு வருகின்றன.
அறிவொளிப் பாடப் புத்தகங்கள், மக்களையும் மக்கள் பிரச்சினைகளையும் மையப்படுத்தி எழுதப்பட்டவை. பாடங்கள் தூண்டிய வெப்ப உரையாடல்கள் வீதிகளில் தெறித்தன. பாடப் புத்தகங்களுக்குள்ளும் சரி, உரையாடல்களுக்குள்ளும் சரி - கடவுள் வந்து எட்டிப் பார்க்கவும் இல்லை; ஏனென்று கேட்கவும் இல்லை!
வகுப்பறை பேச்சு என்றால், அறிவொளி உரையாடல்; வகுப்பறை அடையாளங்களைச் சுமக்கும் மதம் என்றால், அறிவொளி உடையாளங்களை உடைக்கும் ‘மனிதம்’.
மீண்டும் அதே வடிவில் அறிவொளி எழுந்துவர வாய்ப்பில்லை.
ஆனால் ஒன்று உறுதி.
விழிப்புணர்வுக் கல்வி - வகுப்பறைக்கு வெளியேதான் சாத்தியம்.
இதை மட்டும் அறிவொளி அனுபவம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.