தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், ஆசிரியர் பட்டய படிப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. வகுப்புகள் முறையாக நடத்தப்படாத நிலையில், திடீரென்று தேர்வு நடத்துவதைக் கண்டித்தும், ஆன்லைன் தேர்வு நடத்துவதாகக் கூறிவிட்டு வழக்கமான தேர்வுகள் நடத்துவதைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் இன்று (07.09.2021), மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவிகளில் ஒருவரான ஸ்நேகா கூறும்போது, "சென்ற கல்வியாண்டு முழுக்க கரோனா தொற்று உச்சத்தில் இருந்தது என்பதும், அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன என்பதும் ஊரறிந்த விஷயம். ஆனால், ஆசிரியர் பயிற்சி மாணவர்களை மட்டும் நேரில் வரவழைத்து தேர்வு நடத்தினார்கள். 100-க்கு 50 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெறலாம். ஆனால், அத்தனை மாணவர்களுக்கும் ஒற்றை இலக்க மதிப்பெண் மட்டுமே அளிக்கப்பட்டது. உதாரணமாக, எனக்கு சமூகவியல் தேர்வில் வெறும் ஒரே ஒரு மதிப்பெண் தரப்பட்டது. இத்தனைக்கும் நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சமூகவியல் பாடத்தில் 100-க்கு 98 மதிப்பெண் எடுத்தவள். தமிழ்நாடு முழுவதும் வெறும் 2 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்தார்கள். 98 சதவீதத்தினர் தோல்வியடைந்ததாக அறிவித்துவிட்டார்கள்.
அந்தப் பிரச்சினையே இன்னும் முடியவில்லை. அதற்குள் இந்த ஆண்டிற்கான தேர்வுகளை நடத்தியிருக்கிறது தமிழக அரசு. போன ஆண்டு பிரச்சினையே இன்னும் முடியவில்லை, மறுபடியும் தேர்வா? என்று கேட்டபோது, ஆன்லைன் தேர்வுதான் என்று கூறி மாணவர்களை வரவழைத்துவிட்டு வழக்கமான எழுத்துத் தேர்வு நடத்துகிறார்கள். எழுத மறுத்தபோது மிரட்டுகிறார்கள். இதற்கு இணங்கினால் இந்த ஆண்டும் அத்தனை பேரையும் தோல்வியடையச் செய்வார்கள், அவமானமே மிஞ்சும் என்பதால் தேர்வுகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்துகிறோம்” என்றார்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மதுரை மாவட்ட செயலாளர் சேதுபாண்டி, தலைவர் விக்ரம் ஆகியோர் கூறும்போது, "2018-ம் ஆண்டு விடைத்தாள்களைத் திருத்துவதில் ஆசிரியர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான 17-பி கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டபோதே, இணைய வழியில் நடத்தக் கோரி மாணவர்கள் போராடினார்கள். ஆனால், அதிமுக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. புதிய அரசாவது மாணவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். தேர்வு விடைத்தாள் திருத்தும் பிரச்சினையில் உள்ள குளறுபடிகள் குறித்து கல்வித் துறை அமைச்சர் தலைமையில், கல்வித் துறை இயக்குநர், தேர்வுத் துறை இயக்குநர், ஆசிரியர்கள், மாணவப் பிரதிநிதிகள் கொண்ட கூட்டத்தை நடத்தி ஆய்வு செய்து தீர்வுகாண வேண்டும்" என்றனர்.