வாழ்த்துகள் வேண்டாம், ஊதியத்தைக் கொடுங்க!

By கரு.முத்து

இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினம். கல்லாமையை இல்லாமல் செய்யும் ஆசிரியத் தெய்வங்களுக்கு, இந்தியத் திருநாடே வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், காரைக்கால் வேளாண்மைக் கல்லூரியின் ஆசிரியர்களுக்கு இந்தமாத ஊதியம் இதுவரை கிடைக்காததால், ‘வாழ்த்துகள் வேண்டாம் ஊதியத்தைக் கொடுங்கள்’ என்று இறைஞ்சுகிறார்கள் அவர்கள்.

நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர் தொடங்கி பொதுமக்கள் வரை தாங்கள் வாழ்க்கையில் ஏறி வந்த ஏணியாக பணி ஆற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், காரைக்காலில் உள்ள புதுச்சேரி அரசின் வேளாண்மைக் கல்லூரியான பஜன்கோவாவில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்றுவரை இந்த மாத ஊதியம் கொடுக்கப்படவில்லை. காரணம் கேட்டவர்களுக்கு, நிதி தாமதமாக வருகிறது என்று கல்லூரி தரப்பில் பதில் சொல்லப்பட்டுள்ளது.

ஊதியம் கிடைக்காததால் 70- க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் தங்கள் அன்றாடத் தேவைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். இன்று கிடைக்குமா, நாளை கிடைக்குமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனந்த்குமார்

இதுகுறித்து பேசிய அக்கல்லூரி இணைப்பேராசிரியரும், கல்லூரி ஊழல் எதிர்ப்பு மற்றும் ஊழியர் நலச்சங்க தலைவருமான எஸ்.ஆனந்த்குமார், ” மாதம் பிறந்து 5 தேதி ஆகிவிட்டது. இன்னும் இம்மாத சம்பளம் கிடைக்கவில்லை. இப்படி மாதச் சம்பளம் கிடைக்கத் தாமதமானால், ஊழியர்கள் எப்படி வாழ முடியும் என்பதை அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஓட்டு கேட்கும்போது ஒளிரும் என்று சொன்னார்கள். ஆனால், சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர் தினத்தில் தவிக்கும் நிலையே இன்னும் நீடிக்கிறது. நாட்டிலேயே சிறந்த வேளாண் கல்லூரியாக மாற அனைத்து வாய்ப்புகள் இருந்தும் நிதிப் பற்றாக்குறையால் நலிவடைந்து, மாத சம்பளத்திற்கே வக்கற்ற அவல நிலையில்தான் இக்கல்லூரி உள்ளது. இதனை சரிசெய்திட அரசு முன்வர வேண்டும். மொத்தத்தில் எங்களுக்கு இப்போதைய தேவை வாழ்த்துகள் இல்லை, சம்பளம் தான்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE