தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்காக, ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதியை கல்விப் பாதுகாப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என்று, 25 மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், பேராசிரியர் பொ.இராஜமாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ, பாராளுமன்றத்தில் விவாதிக்காமலும் மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலும் ஒருதலைபட்சமாக அமல்படுத்தி வருகிறது ஒன்றிய அரசு. சில மாநில அரசுகள் இக்கொள்கையை நிராகரித்துத் தீர்மானங்கள் இயற்றியும், சில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்தும் அமுல்படுத்தாமல் தயங்கியும் வருகின்றன.
அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கக் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளும் இதில் உள்ள குறைகளை பலமுறை சுட்டிக்காட்டியும், தேசியக் கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பானது சுயமாகவும் பிற அமைப்புகளுடன் இணைந்து அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை கல்வி பாதுகாப்பு நாளாக அனுசரிக்க உள்ளது கூட்டமைப்பு. கல்விப் பாதுகாப்பு நாளான இன்று கல்விக்கான தேசிய கூட்டு இயக்கம் மூலமும், சுயமாகவும், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களைத் திரட்டி கல்விக் கொள்கையை எதிர்ப்பதுடன் அதை முழுமையாகக் கைவிடவும், அரசின் பொதுக் கல்வி முறையை விரிவாக்கவும் தற்போதைய கல்வி முறையை மேம்படுத்தி அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளை நிறைவேற்ற உறுதி எடுக்க அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.