ஆசிரியர் பட்டயத் தேர்வையும் ஆன்லைனில் நடத்தவேண்டும்

By கரு.முத்து

‘தமிழக அரசின் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வையும் மற்ற தேர்வுகளைப் போல இணையம் மூலமே நடத்தவேண்டும்’ என்ற கோரிக்கை, பயிற்சி ஆசிரியர்களால் முன்வைக்கப்படுகிறது. இதை வலியுறுத்தி நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று திருச்சியிலும் பயிற்சி ஆசிரியர்கள் தேர்வைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புக்கான தேர்வு தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 5,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். ‘கரோனா காலத்தில் தங்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்காத நிலையில், தற்போது தேர்வை மட்டும் நேரடியாக நடத்துவது எப்படி சரியாக இருக்கும்’ என்பது பயிற்சி மாணவர்களின் கேள்வி. ”நேரடி வகுப்புகள் மூலம் பாடங்களை நடத்திவிட்டு, அதன்பின்னர் உரிய கால அவகாசம் வழங்கி இணையவழியில் தேர்வை நடத்த வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி ஆசிரியர்கள்

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தேர்வு தொடக்கநாளான செப்.2-ம் தேதி கன்னியாகுமரியில் பயிற்சி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்றும் (செப்.3), திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி வளாகத்தில் தேர்வு எழுத வந்த பயிற்சி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட பயிற்சி ஆசிரிய மாணவி ஒருவர், “நாங்கள் எழுதும் நேரடியான தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடுகள் நடக்கிறது. 2018-க்கு முன்னர்வரை தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதற்குப் பின்னர், கடந்த 4 ஆண்டுகளாக தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெறுவதில் பெரும் சிரமம் இருக்கிறது. இதனால் மற்ற தேர்வுகளைப்போல ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வையும் இணையவழியாகவே நடத்த வேண்டும்” என்றார்.

அவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கலாமே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE