ஆய்வுகளுக்கான மையம் எனும் அந்தஸ்தை இழக்கிறதா ஜேஎன்யூ?

By வெ.சந்திரமோகன்

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ), பல்வேறு இளங்கலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், ஆய்வுகளுக்கான பல்கலைக்கழகம் எனும் நிலையிலிருந்து வெறுமனே படிப்புகளுக்கான மையமாக ஜேஎன்யூ மாறிவிடும் என அப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

அறிவியல், கலை, சட்டம், கல்வி எனப் பல்வேறு பிரிவுகளில் இளங்கலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவது என ஆகஸ்ட் 17-ல் நடந்த ஜேஎன்யூ பல்கலைக்கழகக் கல்வி அலுவல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் பாரசீக மற்றும் மத்திய ஆசியப் படிப்புகள் துறைப் பேராசிரியர் மஸார் ஆசிஃப் தலைமையிலான குழுவின் பரிந்துரையின்பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு நிர்வாகக் கவுன்சிலின் ஒப்புதலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இம்முடிவுக்கு ஜேஎன்யூ ஆசிரியர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

“கற்பித்தல் மூலமும், ஆய்வு மூலமும் அறிவு மற்றும் ஞானத்தை மேம்படுத்துவதும், பரவச் செய்வதும் இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம் என ஜேஎன்யூ சட்டம் 1966-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கற்பித்தலுக்கான பல்கலைக்கழகம், ஆய்வுகளுக்கான பல்கலைக்கழகம் என இரண்டுவிதமான பல்கலைக்கழகங்கள் உண்டு என புதிய கல்விக் கொள்கை தெளிவாக வரையறுத்திருக்கிறது. இந்த அடிப்படையைச் சரியான முறையில் புரிந்துகொள்ளாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஆய்வுப் படிப்புகளுக்கு நாட்டின் மிக முக்கியமான மையமாகத் திகழ்ந்துவரும் ஜேஎன்யூ பல்கலைக்கழகம் இனி வெறுமனே கல்வி கற்பிக்கும் நிறுவனமாகச் சுருங்கிவிடும்” என்கிறது ஜேஎன்யூ பேராசிரியர்கள் சங்கம்.

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே இளங்கலைப் பட்டப்படிப்புகள் உண்டு. அவை சீன மொழி உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் மற்றும் பி.டெக்., தொடர்பான படிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE