பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தோருக்கு இலவச சுற்றுலா

By என்.சுவாமிநாதன்

கேரளத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மனம் சோர்வுற்று இருப்பதால் அவர்களின் புத்துணர்ச்சிக்காக கொடைக்கானலில் உள்ள தனது விடுதிகளில் இலவசமாக தங்கிக்கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளார் கேரளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுதீஷ்

கேரளமாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள வடகரா பகுதியைச் சேர்ந்தவர் சுதீஷ். கேட்டரிங் டெக்னாலஜி படித்திருக்கும் இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் கொடைக்கானலில் தொழில் செய்துவருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் நிரந்தரமாக குடியேறிய சுதீஷ் அங்கு சொந்தமாக உணவகத்துடன் கூடிய விடுதிகளும் நடத்திவருகிறார். அண்மையில் கேரளத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் வெற்றிபெற்றவர்கள் தங்களது வெற்றிச்செய்தியை சமூகவலைதளங்களில் பகிர்ந்தவாறு இருந்தனர். இந்நிலையில் தான் சுதீஷ், இதே தேர்வில் தோல்வியடைந்து மனவிரக்தியில் இருப்போரைக் குறித்து யோசித்தார். இதன் தொடர்ச்சியாக தன் முகநூல் பக்கத்தில் அவர் ஒரு அறிவிப்பும் வெளியிட்டார்.

அதில், ‘பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மன விரக்தி அடையாதீர்கள். அவர்கள் மனம் புத்துணர்ச்சி அடைய கொடைக்கானலில் உள்ள எனது விடுதிகளில் இலவசமாக இரண்டு நாள்கள் தங்கிக்கொள்ளலாம். இங்குள்ள மலைகளின் அழகில் அவர்கள் புத்துணர்ச்சி அடைய முடியும்.’ என பதிவிட்டிருந்தார். இந்தப்பதிவு கேரளத்தில் வைரலானதைத் தொடர்ந்து சுதீஷின் அலைபேசி இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சுதீஷ், இப்படி சுற்றுலா வருபவர்கள் தாங்கள் தேர்வில் தோல்வியுற்றதற்கான ஆவணம், மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் மட்டுமே வரவேண்டும் என்னும் இருநிபந்தனைகளும் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து சுதீஷ், கூறுகையில், ‘சாதரணமாகவே இந்த கரோனா காலத்தில் அனைவருமே மன இறுக்கத்தோடே வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில்தான் பத்தாம் வகுப்புத்தேர்வு முடிவுகளும் வெளிவந்தது. நாம் வழக்கமாக வெற்றியாளர்களின் கதையையே யோசிக்கிறோம். இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் எவ்வளவு மன இறுக்கத்தில் இருப்பார்கள்.பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைவது உலகம் முடிந்துவிடும் விஷயம் அல்ல என்பதை உணர்த்தவேண்டும் எனத் தோன்றியது. பத்தாம்வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தே உயர்கல்வி திட்டமிடப்படுவதால் பத்தாம்வகுப்பு முடிவுகள் குடும்பத்தின் கெளரவமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் தான் மொத்த குடும்பத்துக்கும் இளைப்பாறுதலாக இதை அறிவித்தேன். பதின் பருவத்தினர் என்பதால் வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்களுடன் வந்துவிடும் அபாயம் இருப்பதால் குடும்பத்தோடு வரவேண்டும் என நிபந்தனை வைத்துள்ளேன். இந்த சலுகை இம்மாத இறுதிவரை அமலில் இருக்கும்.’இவ்வாறு சுதீஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE