ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடையில்லாச் சான்று: இயக்குநரிடம் அனுமதி பெற அறிவுறுத்தல்

By சி.பிரதாப்

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல துறைத்தலைவரான இயக்குநரிடம் மட்டுமே அனுமதி பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: அரசுப் பள்ளிகள், அலுவலகங்களில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள், நியமன அலுவலரான மாவட்டக் கல்வி அலுவலரும், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வரை முதன்மைக் கல்வி அலுவலர்களும் கடவுச்சீட்டு பெற, புதுப்பிக்க தடையில்லாச் சான்று வழங்க அனுமதித்து கடந்த 2013-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு நியமன அலுவலரான அக்கல்வி நிறுவனத்தின் நிறுவனப் பேராளரின் அனுமதியின் அடிப்படையில், ஏற்பளிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களையே சார்ந்தது என்பதால் அதன் அடிப்படையில் 2007-ல் வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதில் தவறுகள், சுணக்கம் ஏற்படுவதைத் தவிர்த்து ‘காவல்துறை கண்காணிப்பாளர், பாதுகாப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, மருதம் காம்ப்ளக்ஸ், எண்.17, போட் கிளப் சாலை, சென்னை - 600028' என்ற முகவரியில் செயல்படும் காவல் துறை சிறப்புப் பிரிவுக்கு அனுப்பி எவ்வித குறிப்புரையும் நிலுவையில் இல்லை எனச் சான்று பெறப்பட்ட பின்னர் கடவுச்சீட்டு பெற, புதுப்பிக்க தடையில்லாச் சான்று வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் வெளிநாடு செல்ல துறைத் தலைவரான பள்ளிக் கல்வி இயக்குநரால் மட்டுமே விடுப்பு அனுமதி வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான கருத்துருக்கள் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டு உரிய துறை அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE