ஒன்றிய அளவில் மட்டுமே உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல்: தொடக்கக் கல்வித் துறை விளக்கம்

By சி.பிரதாப்

சென்னை: அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றிய அளவில் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 25.50 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக சுமார் 1.07 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதில் உபரியாக உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநிரவல் செய்யப்படும்.

அதன்படி 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2,236 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இவர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு மே 28-ம் தேதி நடைபெற உள்ளது என்று தொடக்கக் கல்வித் துறை அறிவித்தது. அந்த உத்தரவில், ’தற்போது நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு பணிநிரவல் நடத்தப்பட உள்ளது. எனவே, குறைந்த மாணவர்கள் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்திருந்தது. இதற்கு இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவருகிறது.

இதுதவிர ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பணிநிரவல் செய்யும் பட்சத்தில் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்று ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றிய அளவில் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘உபரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் இல்லை. ஒன்றிய அளவில் மட்டுமே பணிநிரவல் நடைபெறும். எனவே, ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அதேபோல், கடந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் இந்தாண்டும் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. மேலும், எமிஸ் தளத்தின் சர்வர் குளறுபடிகளையும் கருத்தில் கொண்டு விண்ணப்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட உள்ளது’’ என்றனர்.

சி.பிரதாப்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE