தஞ்சையில் அவசர கால மீட்பு பணிகள் ஒத்திகை நிகழ்வு

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் இன்று தஞ்சாவூர் அழகி குளத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் தலைமையில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவியர் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

புகையிலை எதிர்ப்பு குறித்தும், நீர் நிலைகளில் ஏற்படும் அவசரகால விபத்துக்கள் குறித்தும், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்தும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் ச.குமார் விளக்க உரையாற்றினார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆப்த் மித்ரா தன்னார்வலர்கள் மூலம் நீர் நிலைகளில் விபத்துக்கள் ஏற்பட்டால் எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது, எவ்வாறு பிற உயிர்களை காப்பாற்றுவது என்பது குறித்த செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது.

இதில், நமக்கு எளிதில் கிடைக்கும் பொருட்களான பிளாஸ்டிக் குடம், வாட்டர் பாட்டில், தேங்காய், கேன்கள், வாழை மட்டைகள், ட்யூப்கள், மரக் கட்டைகளை பயன்படுத்தி, நீர் நிலைகளில் எதிர்பாராத வகையில் விபத்துக்களில் சிக்குபவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு இதயத்தை துடிக்க வைக்கும் அடிப்படை அவசர முதலுதவி சிகிச்சையை எவ்வாறு செய்வது என்பது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது. மாணவ மாணவியர் 250 பேர் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE