பாரதிதாசன் பல்கலை.யில் கட்டமைப்பு வசதி இல்லாத ‘கலைஞர் இருக்கை’ - அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

By KU BUREAU

திருச்சி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட கலைஞர் இருக்கைக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும் என பேராசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 10 பல்கலைக்கழகங்களில் ‘கலைஞர் இருக்கை’ அமைக்க தமிழக அரசு ஆணை வழங்கியது. அதன்படி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் கலைஞர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கெனவே உள்ள பாரதிதாசன், பெரியார் உயராய்வு மையங்கள், அண்ணா இருக்கை ஆகியவை இயங்கி வரும் கட்டிடத்தில் இதற்கான இடம் ஒதுக்கப்பட்டது.

பாரதிதாசன், பெரியார் உயராய்வு மையங்கள், அண்ணா இருக்கை ஆகியவற்றை கவனித்து வரும் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் தான், கலைஞர் இருக்கைக்கும் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இங்கு கலைஞர் இருக்கைக்கு என்று தனியாக எந்தவித கட்டமைப்பும் இல்லை என்றும், பெயர்ப் பலகைகூட வைக்கவில்லை என்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரத்தினர் கூறியது: ஒரு இருக்கை என்றால் தனியாக அலுவலகம் இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியாளர்களுடன், கம்ப்யூட்டர், நூலகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். அப்போது தான் முனைவர் பட்டம், பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

மேலும், கருத்தரங்கம், சொற்பொழிவுகள் நடத்த வேண்டும். தற்போது கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவடைவதால், கருத்தரங்கம் நடத்த பல்கலைக்கழகம்தான் நிதி ஒதுக்கி உள்ளது. எனவே, கலைஞர் இருக்கைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE