அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் துணை மருத்துவ படிப்புகள் தொடங்கப்படுமா?

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார்மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சிநர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகள் உள்ளன.

இந்த படிப்புகளுக்கு 2024-25 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 23-ம் தேதி தொடங்கியது. ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

பி.பார்ம் படிக்க 2 அரசு கல்லூரிகள், பிஎஸ்சி நர்சிங் படிக்க 6 அரசுகல்லூரிகள் உட்பட துணை மருத்துவ படிப்புகளுக்கு மொத்தம் 14 அரசு கல்லூரிகள் மட்டுமே உள்ளன. ஆனால், 350-க்கும் மேற்பட்டதனியார் கல்லூரிகள் இருக்கின்றன.

இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளை படிக்க லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அரசு கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 15 ஆயிரம் இடங்களும் உள்ளன. மொத்தம் உள்ள இடங்களில் 85 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் தனியார் கல்லூரிகளில்தான் உள்ளது.

எனவே, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் துணைமருத்துவ படிப்புகளை தொடங்கதமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால், ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE