ஜூன் 15, 16-ல் ஜெஇஇ தேர்வர்களுக்கு ஐஐடி குறித்த செயல் விளக்க முகாம்

By லிஸ்பன் குமார்

சென்னை: ஐஐடி மாணவர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜெஇஇ தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2 நாள் செயல் விளக்க முகாம் சென்னை ஐஐடியில் ஜூன் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

ஐஐடியில் பிடெக் படிப்பில் சேருவதற்கு ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு மதிப்பெண் அவசியம். இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வின் முடிவு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வெழுதிய மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் ஐஐடி மாணவர் வாழ்க்கை, கல்விச்சூழல், அங்குள்ள வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2 நாள் செயல்விளக்க முகாமுக்கு சென்னை ஐஐடி ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் கிண்டியில் உள்ள ஐஐடியில் ஜுன் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

அப்போது ஜெஇஇ தேர்வர்களும், அவர்களின் பெற்றோரும் ஐஐடி வளாகத்தை பார்வையிடலாம். ஐஐடி மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், ஐஐடி மூத்த பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடலாம். ஐஐடியில் இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பிடெக் டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்டிபிசியல் இண்டலிஜென்ஸ் படிப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

முகாமில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் www.askiitm.com/demo என்ற இணையதளத்தில் உடனடியாக பதிவுசெய்துகொள்ள வேண்டும். இந்த 2 நாள் முகாமில் பங்கேற்க இயலாத மாணவர்கள் ஜுன் 17-ம் தேதி நடைபெறும் ஆன்லைன் அமர்வில் பங்கேற்கலாம். அப்போது ஐஐடி இயக்குநர் வி.காமகோடி மற்றும் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், கல்வி மற்றும் கல்வி சாரா வாழ்க்கை தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE