சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறை​வாக இருந்த மத போதகர் சிக்கியது எப்படி?

By KU BUREAU

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தலைமறைவாக இருந்த மத போதகர் மூணாறில் கைது செய்யப்பட்டார்.

கோவை துடியலூரை அடுத்துள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ்(37). கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள கிறிஸ்தவ ஜெபக் கூடத்தில் மதபோதகராகப் பணியாற்றி வருகிறார். கிறிஸ்தவ கூட்டங்களில் பாட்டுப்பாடி, நடனமாடி பிரசங்கம் செய்வது இவரது வழக்கம்.

இந்நிலையில், கோவையில் 2 சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த அவர் தலைமறைவானார்.

பின்னர், மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீஸார் அவரைத் தேடி வந்தனர். மேலும், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க ‘லுக் அவுட்’ நோட்டீஸும் வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரள மாநிலம் மூணாறு பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து, போலீஸார் அங்கு சென்று, அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோவை காந்திபுரத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, அங்கு விசாரித்தனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE