தஞ்சை காவல்நிலைய வாசலில் இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை: திமுக அரசுக்கு சீமான் கண்டனம்

By KU BUREAU

சென்னை: தஞ்சாவூர் நடுக்காவேரி காவல்நிலைய வாசலில் இளம்பெண் பொறியாளர் கீர்த்திகா விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உயிரிழந்த கீர்த்திகாவின் அண்ணன் தினேஷ் தனது தங்கைக்குத் திருமண நிச்சய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தன்னைக் கைது செய்ய வேண்டாம் என்று காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதனை ஏற்காத காவல் ஆய்வாளர் சர்மிளா அவர்கள் பொய்ப்புகாரில் தினேசை கைது செய்தது மட்டுமின்றி, அவரை விடுவிக்கக்கோரிய அவரது இரு தங்கைகளையும் தரக்குறைவாகப் பேசியதும்தான், தினேசின் தங்கை கீர்த்திகா காவல் நிலைய வாசலிலேயே தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணமாகும். தற்கொலைக்கு முயன்ற மற்றொரு தங்கை மேனகா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீரழிந்துள்ள நிலையில், அதிகாரபலமும், பணபலமும் உள்ள சமூக விரோதிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, எளிய மக்கள் மீது மட்டும் மிகவும் கடுமையாக நடந்துகொள்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

நெஞ்சை உலுக்கும் இவ்விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்தி, இளம்பெண் பொறியாளர் கீர்த்திகா தற்கொலைக்குக் காரணமான காவல் ஆய்வாளர் சர்மிளா உள்ளிட்ட காவல் துறையினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE