வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்: தென்காசி கடையம் பெண் காவல் ஆய்வாளர் கைது

By த.அசோக் குமார்

தென்காசி: வழக்கை விரைவில் முடித்து, வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடையம் காவல்நிலைய பெண் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். லஞ்சவழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த மணி என்பவரது மகன் செல்வகுமார். விவசாயியான இவர் மீது தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு உள்ளது. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள செல்வகுமார், தினமும் கடையம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு வருகிறார். இந்த வழக்கில் செல்வகுமாரின் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், வழக்கு தொடர்பாக செல்வகுமார் கடையம் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை கடையம் காவல் நிலையத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, வழக்கை விரைவில் முடித்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை விடுவிக்க ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறும் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், இது தொடர்பாக தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து, காவல்துறையினரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய பணம் ரூ.30 ஆயிரத்தை காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று, ஆய்வாளர் மேரி ஜெமிதாவிடம் செல்வகுமார் இன்று (சனிக்கிழமை) கொடுத்துள்ளார்.

லஞ்சப் பணத்தை காவல் ஆய்வாளர் பெற்றுக்கொண்டதை அறிந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பால்சுதர் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று, காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை கைது செய்தனர். லஞ்ச வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE