திருப்பாச்சேத்தி ஊராட்சி செயலரை தாக்கிய முன்னாள் ஊராட்சி தலைவர் கைது: சிவகங்கை பரபரப்பு

By KU BUREAU

சிவகங்கை: திருப்பாச்சேத்தி ஊராட்சி செயலரை தாக்கிய முன்னாள் ஊராட்சித் தலைவரை கைது செய்ய வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். முன்னாள் ஊராட்சித் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருபவர் தவமணி (46). அவர், ஊராட்சி அலுவலகத்தில் தற்காலிக கணினி இயக்குபவராக பணிபுரிந்து வந்த விஜயா (36) என்பவரை பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் ராமு (57) நேற்று முன்தினம் ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்று பணியிலிருந்த ஊராட்சி செயலர் தவமணியை அவதூறாக பேசி, தாக்கியுள்ளார். காயமடைந்த தவமணி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் திருப்பாச்சேத்தி போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

போலீஸார் நடவடிக்கை எடுக்க தாமதமான நிலையில், அன்று இரவு ஊராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாக்கியராஜ் தலைமையிலானோர் தர்ணாவில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன்னாள் ஊராட்சித் தலைவர் ராமு, பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி இயக்குபவர் விஜயா ஆகியோர் மீது திருப்பாச் சேத்தி போலீஸார் வழக்குப் பதிந்து, ராமுவை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE