உடுமலையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது - 38 சவரன் தங்க நகை பறிமுதல் 

By எம்.நாகராஜன்

உடுமலை: உடுமலையில் 8 இடங்களில் அடுத்தடுத்து கொள்ளையில் ஈடுபட்ட நபரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பிடிபட்ட நபரிடமிருந்து 38 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'உடுமலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்க எஸ்.பி., யாதவ் கிருஷ் அசோக் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் உடுமலை, அய்யலுமீனாட்சி நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திவாண்(எ) சுப்பிரமணியன்(25) என்பதும் இந்த நபர் உடுமலை சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்தது. மேற்படி நபரிடமிருந்து 38 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் மீது நாமக்கல்,கரூர், சேலம், சென்னை உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நிகழாது தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், விழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் தங்களது விபரத்தை அருகிள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம். காவல் உதவிக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். துணைக் கண்காணிப்பாளர் : 9498101323, 80725519474, உடுமலை ஆய்வாளர்: 9498101345, 9498168530,7904475276. காவல் கட்டுப்பாட்டு அறை : 9498101320, 9498181208, 100' என நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE