பெண்ணிடம் பண மோசடி செய்து கைதான திருச்சி அதிமுக நிர்வாகி: கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு

By KU BUREAU

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள வாழவந்தான்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா(38). போலீஸாரின் ரவுடி பட்டியலில் உள்ளார். அதிமுக கலைப் பிரிவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார்.

இவர், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.30 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீஸார் அண்மையில் ராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜா மீது நில அபகரிப்பு தொடர்பாக மேலும் ஒரு வழக்கை போலீஸார் பதிவு செய்தனர்.

இந்நிலையில், ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைத்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருடன் அதிமுகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE