போளூர் அடுத்த செங்குணம் கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முட்டை கேட்ட மாணவரை துடைப்பத்தால் தாக்கிய 2 சத்துணவு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தடுக்க தவறியதற்காக இடைநிலை ஆசிரியரும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, ஒவ்வொரு சத்துணவு மையங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆனால், மாணவர்களுக்கு முட்டை வழங்காமல், கள்ள சந்தையில் சத்துணவு ஊழியர்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ஒரு நிகழ்வு, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஏப்.2-ம் தேதி நிகழ்ந்துள்ளது.
போளூர் அடுத்த செங்குணம் கொல்லைமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுமார் 44 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியில் உள்ளனர். மாணவர்களுக்கு கடந்த 2-ம் தேதி சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது ஒரு மாணவருக்கு முட்டை வழங்கவில்லை. முட்டை கேட்ட 5-ம் வகுப்பு மாணவரிடம், தீர்ந்துவிட்டதாக கூறி சத்துணவு ஊழியர்கள் விரட்டியுள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த அம்மாணவர், சமையல் அறைக்கு நேரிடையாக சென்று, முட்டைகளை பதுக்கி வைத்திருப்பதை உறுதி செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சத்துணவு சமையலர் லட்சுமி, சத்துணவு உதவியாளர் முனியம்மாள் ஆகியோர் மாணவரை வகுப்பறையில் விரட்டி விரட்டி துடைப்பத்தால் சராமரியாக தாக்கியுள்ளனர். மாணவரின் கதறல் மற்றும் மிரண்டு போன சக மாணவர்களின் உணர்வுகளை பற்றி சிறிதும் சிந்திக்காமல், துடைப்பதால் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி, மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
» மோசடிகளில் இது புதுரகம்: வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் அறிவுரை
» புதுச்சேரியில் அம்பேத்கர் யாத்ரா உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு அரசாணை வெளியீடு
அதன்படி தொடக்கக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மதிய உணவு திட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, சமூக வலைதளத்தில் வெளியான காட்சிகளை உறுதிப்படுத்தினர். இதையடுத்து சமையலர் லட்சுமி, சமையல் உதவியாளர் முனியம்மாள் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவரை சத்துணவு ஊழியர்கள் தாக்கியதை தடுக்க தவறியதற்காக, இடைநிலை ஆசிரியர் ஃபுளோரா மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும் மற்றும் எடப்பிறை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும், சமையலர் மற்றும் உதவியாளர் மீது போளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்