மோசடிகளில் இது புதுரகம்: வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் அறிவுரை

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சமீபத்தில், வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் மற்றும் வாட்ஸ்அப் தொடர்புடைய மோசடிகள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் உஷாராக இருக்கும்படி சைபர் க்ரைம் போலீஸார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

இது தொடர்பாக சென்னை சைபர் க்ரைம் போலீஸார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மோசடி நபர்கள் பாதிக்கப்பட்டவரின் செல்போனுக்கு ஆறு இலக்க ஓடிபி (OTP) குறியீடு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பி வைப்பார்கள். பின்னர் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து, நமது வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வரும். அதில் வாட்ஸ்அப் கணக்கிற்கான ஆறு இலக்க குறியீடு உங்களது எண்ணுக்கு தவறாக அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அந்த ஓடிபி குறியீட்டை பகிருமாறு கேட்டுக் கொள்வார்கள்.

சில நேரங்களில், இந்த ஆறு இலக்க ஓடிபி குறியீட்டை நமது நெருங்கிய தொடர்புகளிலிருந்து வாட்ஸ்-அப்பில் கோரலாம். இதனை உண்மை என்று நம்பி இந்த ஆறு இலக்க ஓடிபி குறியீட்டை பகிர்வார்கள். ஆனால் உண்மையில், மோசடி செய்யும் நபர் பாதிக்கப்பட்டவரின் தொடர்புகளை போல ஆள்மாறாட்டம் செய்து செயல்படுகிறார்கள்.

ஒரு முறை பாதிக்கப்பட்ட நபர் அந்த குறியீட்டை பகிர்ந்துவிட்டால், அவருடைய வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படும் மற்றும் குற்றவாளிகள் அதன் கட்டுப்பாட்டைப் பெறுவர். அதன்பிறகு குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட நபரைப் போல ஆள் மாறாட்டம் செய்து, அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்புவர். அவற்றில் அவசர உதவி, விபத்து செலவுகள், மருத்துவத் தேவைகள் போன்றவற்றிற்காக பண உதவி கோருவர். மேலும், பணத்தை செலுத்த ஒரு வங்கி கணக்கு எண் அல்லது போன்பே, ஜிஜே, பேடிஎம் போன்ற இணைய பண பரிவர்த்தனை வழிகளை அனுப்புவர்.

இந்த செய்திகள் பழக்கமான நபர்களிடமிருந்து வருவதால், பெரும்பாலும் சந்தேகம் எழுவதில்லை. இதனால், தகவல் பெறும் நபர் பணத்தை அனுப்பிவிட்டு, பின்னர் தான் இது ஒரு மோசடி என்பதை உணர்கிறார். மேலும் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட நபரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் வாட்ஸ்அப் கணக்குகளையும் அதே செயல்படுத்தும் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி ஹேக் செய்கிறார்கள். இதன் மூலம் இந்த மோசடி தொடர்கிறது.

இந்த வாட்ஸ்அப் மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி? - நீங்கள் ஒரு 6 இலக்க ஓடிபி அல்லது செயல்படுத்தும் குறியீட்டை பெற்றால், அதை யாருடனும் பகிர வேண்டாம். உங்கள் தொடர்புகள், குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் பணம் கேட்டு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினால், மிகுந்த கவனமாக இருங்கள். பணம் பரிமாற்றம் செய்யும் முன், அந்த நபரின் செல்போனில் தொடர்புகொண்டு அது உண்மையான கோரிக்கையா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

குற்றவாளிகள் உங்கள் தொடர்புகளைப் போல ஆள் மாறாட்டம் செய்யலாம் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். உங்கள் வாட்ஸ்அப்பில் டூ ஸ்டெப் வெரிபிகேசனை செயல்படுத்துங்கள். இது உங்கள் கணக்கை கூடுதல் பாதுகாப்புடன் வைத்திருக்க உதவும். பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக சைபர் க்ரைமில் புகார் தெரிக்கவும். இவ்வாறு சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE