ரூ.1 லட்சம் லஞ்சம்: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் பெண் செயல் அலுவலர் கைது

By KU BUREAU

திருவாரூர்: நிலுவை ஊதிய உயர்வை வழங்குவதற்காக கோயில் ஊழியரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் பெண் செயல் அலுவலர் நேற்று கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோயிலில் செயல் அலுவலராகப் பணியாற்றி வருபவர் ஜோதி (42). இவர் கூடுதல் பொறுப்பாக மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயில் செயல் அலுவலராகவும் உள்ளார். பொங்கு சனீஸ்வரர் கோயிலில் எழுத்தராகப் பணிபுரிந்து வரும் சசிகுமார் (49) என்பவர் 2015-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்றிருந்த நிலையில், இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

இதையடுத்து, ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ரூ.2 லட்சத்தை வழங்க தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று சசிகுமாரிடம் செயல் அலுவலர் ஜோதி கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிகுமார் இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸார் ஏற்பாட்டின்படி, ரசாயனம் தடவிய ரூ.1 லட்சத்தை, மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் நேற்று பணியில் இருந்த ஜோதியிடம் சசிகுமார் கொடுத்தார். அதை ஜோதி வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE