நெல்லை: பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கு, 2 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்து வருவதாக, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், பாதிக்கப்பட்ட மாணவிகள் உருக்கமான மனு அனுப்பியுள்ளனர். அந்த பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் 2 பேராசிரியர்கள் இணைந்து, கடந்த 2 ஆண்டுகளாக இறுதியாண்டு மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி வைத்துக்கொண்டு பாலியல் தொல்லை அளித்து வருகிறார்கள். அடிக்கடி செல்பேசியில் அழைத்து இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை மணிக்கணக்கில் பேசுகிறார்கள்.
போதை ஊசி மற்றும் போதை மருந்துகளை தருகிறோம், அவற்றை பயன்படுத்தி பாருங்கள், மிகவும் நன்றாக இருக்கும் என்றெல்லாம் அடிக்கடி கூறி வருகிறார்கள். தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரில், கல்லூரிக்கு அருகே ஒரு வீட்டில் வகுப்பு எடுப்பதுபோல் பாலியல் தொந்தரவு செய்து வருகிறார்கள். அவர்கள் சொல்படி நடக்கவில்லை என்றால் பெயிலாக்கி விடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.
இந்த 2 பேராசிரியர்களையும் இடமாறுதல் செய்தால் மட்டுமே மாணவிகள் நிம்மதியாக கல்வி பயில முடியும். இந்த பேராசிரியர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்றுங்கள். இல்லையெனில் கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்வதைவிட வேறு வழியில்லை என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
» குளித்தலை சிறுமிக்கு பாலியல் தொல்லை: 5 இளைஞர்கள் போக்சோவில் கைது
» அரியலூர்: பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவர், மாமனார் - மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை