தேனி: பெரியகுளம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (40). கணவர் இறந்த நிலையில் 13 வயது மகன் நிஷாந்த், தனது தம்பி பாண்டீஸ்வரன் (29) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்தார்.
பாண்டீஸ்வரன் மதுவுக்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்ததை ஆனந்தி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரன் இரும்பு கம்பியால் ஆனந்தி, நிஷாந்த் ஆகியோரை தாக்கினார். இதில் நிஷாந்த் அதே இடத்தில் இறந்தார். ஆனந்தி பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார்.
இதில் இருவரும் இறந்து விட்டதாக நினைத்து பயந்துபோன பாண்டீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை வெகு நேரமாக மூவரும் வெளியே வராததால் அருகில் உள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீஸார் வந்து கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்தியை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான போலீஸார் நேரில் ஆய்வு செய்தனர். இச்சம்பவம் குறித்து வடகரை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
» மாணவிகள் மீது கல்வீசி தாக்குதல்: பெரம்பலூர் விடுதி சமையலர் பணியிடை நீக்கம்
» திருச்சியில் விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் உட்பட 2 பேர் மீது வழக்கு