எட்டயபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விரிவுரையாளர் மீது புகார்

By KU BUREAU

தூத்துக்குடி: எட்டயபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், மாணவியிடம் தவறாக நடந்ததாக விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் செயல்பட்டு வருகிறது. இங்கு 292 மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 121 மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி பயில்கின்றனர். பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என, 59 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவி ஒருவர், மெக்கானிக்கல் பிரிவு விரிவுரையாளர் மதன்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி முதல்வர் பேபி லதாவிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கல்லூரி பெண்கள் பாதுகாப்பு கமிட்டி (விசாகா) சார்பில் விசாரணை நடைபெற்றது.

இது குறித்த தகவல் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கவனத்துக்கு சென்றது. அதைத்தொடர்ந்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் நேற்று பாலிடெக்னிக் வந்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் பேபி லதாவிடம் கேட்டபோது, ‘பாலியல் தொடர்பான புகார் வந்திருப்பது உண்மை தான். பெண்கள் பாதுகாப்பு கமிட்டி விசாரித்துக் கொண்டிருக்கிறது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு தான் எதையும் தெளிவாக சொல்ல முடியும்’ என்றார்.

பாஜக ஆர்ப்பாட்டம்: மாணவியிடம் தவறாக நடந்த விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று மாலை பாலிடெக்னிக் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE