பிரி​யாணி, சவர்மா சாப்​பிட்ட 20 பேர் பாதிப்பு: திருவல்லிக்கேணி​யில் பிரபல ஓட்​டலுக்கு பூட்டு

By KU BUREAU

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல ஓட்டலில் பிரியாணி, சவர்மா சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதைத் தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பூட்டுபோட்டு சீல் வைத்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணி ஹைரோட்டில் இயங்கி வரும் ஓட்டல் பிலால் பிரியாணி கடையில் கடந்த 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரியாணி, சவர்மா உள்ளிட்ட உணவுகளை உட்கொண்ட 20 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனை, தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த ஓட்டல் மதியம் 1 மணிமுதல் இரவுவரை இயங்கக்கூடியது என்பதால், புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்வதற்காக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் அங்கு சென்றனர். ஆனால் அதிகாரிகள் வருகை குறித்து முன்கூட்டியே அறிந்த ஓட்டலின் உரிமையாளர்கள் ஓட்டல் நுழைவு வாயில்களை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

பின்னர் உரிமையாளர்களை செல்போன் மூலம் தொடர்புகொள்ள அதிகாரிகள் முயன்றபோது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகளுடன் இணைந்து ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சதீஷ்குமார் கூறுகையில், ``முறையான சோதனை நடத்தப்படும் வரை மக்கள் ஓட்டலில் சாப்பிட்டு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தற்காலிகமாக பூட்டியுள்ளோம். உரிமையாளர்களை தொடர்புகொள்ள தொடர்ந்து முயன்று வருகிறோம். ஓட்டலில் போடப்பட்டுள்ள பூட்டை எங்களின் அனுமதியின்றி உடைத்தால் கிரிமினல் குற்றம். உரிய விளக்கம் தரும்வரை இக்கடையை திறக்க விடமாட்டோம்'' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே அண்ணா சாலையில் இயங்கி வரும் பிரபல பிரியாணி ஓட்டலிலும் அதே 30-ம் தேதி சிக்கன் சூப், மட்டன் பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் கூறுகையில், ``பிரபல ஓட்டலில் கெட்டுபோன உணவை உண்டதால்தான் தங்களது பிள்ளைகளுக்கு வாந்தி, காய்ச்சல் ஏற்பட்டது.

இதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த பிரபல பிரியாணி ஓட்டலில் சோதனை மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தனர். திருவல்லிக்கேணி, அண்ணா சாலையில் இயங்கி வந்த 2 பிரபல ஓட்டல்களில் சாப்பிட்டு 20-க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE