கூடலூரில் தேனீக்கள் கொட்டியதில் கேரள இளைஞர் உயிரிழப்பு

By ஆர்.டி.சிவசங்கர்

கூடலூர்: கூடலூரில் தேனீக்கள் கொட்டியதில் கேரள இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரம்ஜான் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை செவ்வாய்க்கிழமை அதிகரித்து. இந்நிலையில் இன்று (ஏப்.2) மதியத்துக்கு மேல் கூடலூர் அருகே உள்ள ஊசி மலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள காட்சி முனைக்கு சென்றுள்ளனர். இதில் கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை பகுதியில் இருந்து காரில் வந்த இளைஞர்கள் சிலர் காட்சி முனை பகுதிக்கு சென்று உள்ளனர்.

அதில் ஜாகீர்(26) மற்றும் ஆசிப்(26) இருவரும் காட்சி முனைப் பகுதியில் இருந்து பள்ளத்தில் உள்ள பாறை பகுதிகள் வழியாக இறங்கி கீழே சென்று அங்குள்ள தேனீ கூடு ஒன்றின் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. இதில் கூட்டில் இருந்து கலைந்து வந்த தேனீக்கள் கொட்டியதில் ஜாகீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மற்றும் வனத்துறையினர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இறந்த ஜாகீரின் உடலை மீட்டு வந்தனர்.

உடன் இருந்த ஆசிப் ஆபத்தான நிலையில் உடனடியாக கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தேனி கூட்டில் இருந்த மலைத் தேனீக்கள் மொத்தமாக வந்து கொட்டியதில் அதிக விஷம் பரவி உயரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நடுவட்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE