ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் வேட்டை நாய்கள் வைத்து மான் வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் விவசாய நிலத்துக்குள் வரும் மான்களை வேட்டை நாய்கள் வைத்து மர்ம நபர்கள் சிலர் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் மலையடிவாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை 10.30 மணி அளவில் ரெங்கர் கோயில் பீட்டுக்கு உட்பட்ட விவசாய தோட்டத்தில் மான் வேட்டையில் ஈடுபட்ட பெருமாள்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் தங்கராஜ்(30), சிவன் மகன் முத்துகிருஷ்ணன்(38) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை சேர்ந்த ராமசாமி மகன் சந்திரகுமார்(26), முத்துசாமி மகன் நாகராஜ்(34) இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, “ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் ரெங்கர் கோயில் பீட்டில் வனப்பகுதிக்கு வெளியே பட்டா நிலத்தில் வைத்து நாய்கள் மூலம் மானை வேட்டையாடி உள்ளனர். இறந்த புள்ளிமானுக்கு 3 முதல் 4 வயது இருக்கும். வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர்.
» பழநியில் பக்தர்களுக்கு இலவசமாக தயிர் சாதம், காய்கறி கூட்டு!
» சாத்தூர் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு