நாகர்கோவில்: சொத்து மதிப்பு சான்றிதழ் பெறுவதற்காக ரூ.3000 லஞ்சம் வாங்கிய தலக்குளம் கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் ஆகியோர் இன்று (ஏப்.2) கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுக்காவுக்கு உட்பட்ட தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகம் திங்கள்நகரில் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அமலராணி (45). கிராம உதவியாளராக பேபி உள்ளார். இந்நிலையில் நெய்யூர் அருகே புதுவிளையை சேர்ந்த ஆறுமுகம் (56) என்ற ஒப்பந்ததாரர், ஒப்பந்த பணிகளை செய்வதற்காக சொத்து மதிப்பு சான்றுக்கு தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அவர் தனது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணத்தை காண்பித்துள்ளார். சொத்து மதிப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும்போது கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்து அதன் பின்னர் வருவாய் அலுவலர் பரிந்துரை செய்த பின்னர் தாசில்தார் அலுவலகம் மூலமாக சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். சொத்து மதிப்பு சான்று பெற பரிந்துரை செய்து முதலில் அனுப்பும் கிராம நிர்வாக அலுவலர் அமலராணி சொத்து ஆவணத்தை காண்பித்து விண்ணப்பித்தபோது 30 ஆயிரம் ரூபாய் மதிப்பு சொத்து சான்றிதழ் பெறுவதற்கு தான் பரிந்துரைக்க முடியும் என்று கூறி இழுத்தடித்துள்ளார்.
மேலும் பரிந்துரைப்பதற்கு நான்காயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டு உள்ளார். பேரம் பேசி 3000 ரூபாய் தந்தால் மதிப்பு சான்று பெற பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம், குமரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து குமரி லஞ்ச ஒழிப்பு போலீஸார் கிராம நிர்வாக அலுவலகம் வந்து அங்கு மறைந்திருந்தனர். அப்போது ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் ரூபாய் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் அமலராணியிடம், ஆறுமுகம் கொடுக்கும்போது அருகில் இருந்த அலுவலக உதவியாளர் பேபியிடம் கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.
» பழநியில் பக்தர்களுக்கு இலவசமாக தயிர் சாதம், காய்கறி கூட்டு!
» சாத்தூர் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
அந்த பணத்தை பேபி வாங்கும்போது அங்கு மறைந்திருந்த குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சால்வன்துரை மற்றும் போலீஸார் இருவரையும் கைது செய்தனர். ரூ.3000 ரூபாய் லஞ்சம் பெறும்போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டது குமரி மாவட்ட வருவாய்த் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.