கஞ்சா கடத்தி வந்த ஒடிசா இளைஞர்கள் இருவர் கைது: ராமநாதபுரத்தில் 19.600 கிலோ கஞ்சா பறிமுதல்

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: ஒடிசாவிலிருந்து 19.600 கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்தி வந்த இரண்டு இளைஞர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் இருந்து ராமநாதபுரம் வந்த சேது விரைவு ரயிலின் முன்பதிவில்லாத பெட்டியில், ராமேசுவரம் ரயில்வே போலீஸார் இன்று அதிகாலையில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அமர்ந்திருந்த இரு இளைஞர்களை போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் வைத்திருந்த டிராவல் பேக்குகளில் 19.600 கிலோ கஞ்சா பண்டல்களில் வைத்திருந்தது தெரிய வந்தது .

அதனையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் லெக்ஷன் சாகர் பகுதியைச் சேர்ந்த சிட்டா ராஜன் மகன் பிரதேஷ் மொகாந்தி (28), புவனேஸ்வர் கருநந்தா நகர் பகுதியைச் சேர்ந்த பிரேமானந்தா மகன் பிரியாபாரத் மொகாந்தி (40) ஆகியோரை, ராமேசுவரம் ரயில்வே போலீஸ் சார்பு ஆய்வாளர் மயில் முருகன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து, சேது விரைவு ரயிலில் ஏறி மண்டபம் வரை பயணம் செய்வதற்காக வந்தபோது, கஞ்சா பண்டல்களை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும், ராமநாதபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE