தேனியில் சத்துணவு ஊழியருக்கு பாலியல் தொந்தரவு: 2 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு

By KU BUREAU

தேனி: சத்துணவு ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற 2 ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தேனி பழனிசெட்டிபட்டி கள்ளர் நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் பெண் பணியாளர் வேலை செய்கிறார். இப்பள்ளியில் ஆசிரியராக ஜெயபிரகாஷ் பணியாற்றுகிறார். இவரும் ராஜதானி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் குபேந்திரன் ஆகியோரும் சேர்ந்து அப்பெண்ணிடம் செல்போனில் தவறாக பேசியுள்ளனர். மேலும் கடந்த மார்ச் 22ம் தேதி அப்பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்து மிரட்டி அவர்கள் பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்துள்ளனர்.

இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் சார்பு ஆய்வாளர் மலரம்மாளிடம் அவர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, 2 ஆசிரியர்கள் மீதும் அத்துமீறி நுழைந்து மிரட்டுவது, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, இது தொடர்பாக விளக்கம் கேட்டு அரசு கள்ளர் பள்ளிகளின் மதுரை மண்டல இணை இயக்குநர் முனுசாமி நோட்டீசு அனுப்பி உள்ளார்.

இது குறித்து இணை இயக்குநர் கூறுகையில், 2 ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். பதில் கிடைத்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE