வேலூர்: ஊராட்சி ஒன்றியத்தில் 100 சதவீதம் வரி வசூல் முடிக்க முடியாத நிலையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் அதிகாரிக்கு தற்கொலை மிரட்டல் ஆடியோவை அனுப்பி வைத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் லோகநாதன். இவர், பணிச் சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது உயர் அதிகாரியின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ குறித்த தகவல் தற்போது வெளியான நிலையில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, "தற்கொலை ஆடியோவை அனுப்பி வைத்த லோகநாதன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் பணியாற்றியபோது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு விரிஞ்சிபுரம் உள்ளிட்ட சில ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் புகாரால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.
மார்ச் மாதம் என்பதால் கிராம ஊராட்சிகள் அளவில் வரி வசூல் 100 சதவீதம் முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்தனர். இதை முடிக்க முடியாத நிலையில் பணிச்சுமை என கூறி தற்கொலை மிரட்டல் ஆடியோவை அனுப்பியுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தனர்.
» தங்கையை ஆணவக்கொலை செய்த அண்ணன்; மாற்று சமூக இளைஞரை காதலித்ததால் கொடூரம்; பல்லடம் அதிர்ச்சி
» குழந்தைகளை அடித்த விவகாரம்: தளி அருகே தம்பியை கொன்று அண்ணன் தலைமறைவு