சேலம் அருகே உடல் எடை குறைக்கும் நிபுணரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் திருச்செங்கோடு சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). உடல் எடையை குறைக்கும் நிபுணராக பணியாற்றி வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி ராஜேந்திரனை அதிகாலை 3 மணிக்கு அழைத்துள்ளார். அதற்காக இருசக்கர வாகனத்தில் ராஜேந்திரன் சின்னா கவுண்டனூர் பகுதியில் சென்ற போது, மர்ம நபர்கள் அவரை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என இதுவரை தெரியாத நிலையில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்களுக்கும், கொலை செய்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர். மேலும், சொத்து தகராறில் இச்சம்பவம் நடந்ததா என்பது குறித்தும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
கொலை நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு எஸ்பி கவுதம் கோயல், டிஎஸ்பி சிந்து நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை சேகரித்தனர். மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரி்த்து வருகின்றனர்.
» ஆந்திராவிலிருந்து கடத்தல்; கைப்பேசி வாயிலாக சாராயம் விற்ற இருவர் வேலூரில் கைது
» 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி; ஆம்பூர் அருகே காப்புக்காட்டில் எலும்புக் கூடாக கண்டெடுப்பு