கோவை: பகுதி நேர வேலையில் அதிக லாபம் தருவதாகக் கூறி ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி உட்பட 3 பேரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவை வெரைட்டி ஹால் சாலை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (65). இவர் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு வீட்டில் இருந்தவாறு சம்பாதிக்கலாம் என வாட்ஸ் அப் செயலியில் தகவல் வந்தது. அதில் தொடர்பு கொண்டு பேசிய போது, தங்களிடம் முதலீடு செய்தால் 1500 சதவீதம் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து 15 தவணைகளாக ரூ. 28.49 லட்சத்தை பல்வேறு கால கட்டங்களில் செலுத்தினார். ஆனால், முதலீடு செய்த பணத்திற்கு லாப தொகை கிடைக்கவில்லை. மேலும் முதலீட்டு பணத்தை திரும்பி பெற முடியவில்லை. இது குறித்து வெங்கட்ராமன், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
டிராவல்ஸ் முதலீடு மோசடி: துடியலூரை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி (32) என்பவருக்கு மாதவி என்பவர் டெலிகிராம் மூலம் தங்களது டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவித்தார். இதை நம்பிய ராஜலட்சுமி பல தவணைகளாக ரூ.14.41 லட்சம் முதலீடு செய்தார். லாப தொகையும் கிடைக்கவில்லை. மேலும் முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜலட்சுமி, மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார்.
» புதுக்கோட்டை ஜகபர் அலி கொலை: கல் குவாரி உரிமையாளர் மனைவியின் மீதும் வழக்குப் பதிவு
» போக்சோவில் கைதான தக்கலை வழக்கறிஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
பகுதி நேர வேலை மோசடி: கோவை கோபாலாபுரத்தை சேர்ந்தவர் விமலநாதன் (38). இவரை டெலிகிராம் செயலி மூலம் தொடர்பு கொண்ட நபர்கள் பகுதி நேர வேலையாக டிஜிட்டல் பரிவர்த்தனையில் தங்கம் வாங்கி விற்று வணிகம் செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்த னர். இதை நம்பிய விமலநாதன், பல தவணைகளாக ரூ.9.25 லட்சம் பணத்தை முதலீடு செய்தார்.
பணத்திற்கு லாப தொகை கிடைக்கவில்லை. மேலும், முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. இது குறித்து விமலநாதன், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.