திருவள்ளூர்: திருவள்ளூரில் வீட்டு பத்திரம் அடமானம் வைத்து கடன் பெற ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர், கணக்காளர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் ஒன்றியம், பெருமாள்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஓட்டல் தொழில் செய்வதற்காக அவருடைய பெற்றோர் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை, திருவள்ளூரில் உள்ள மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அடமானம் வைத்து கடனாக பணம் பெறுவதற்காக சென்றுள்ளார்.
தனது தந்தையுடன் சென்ற சிவக்குமார், ஆவணங்களை கொடுத்து கடன் கேட்டுள்ளார். அதன்படி, ஆவணங்களை பரிசீலனை செய்து கடந்த 27-ம் தேதி சிவக்குமாரின் தந்தை பெயரில் ரூ.11.76 லட்சத்துக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. காசோலையை வழங்கும் போது கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரியும் ராமலிங்கம் என்பவர் லஞ்சமாக ரூ.17 ஆயிரம் கேட்டு அதனை கணக்காளராக பணிபுரியும் ஏகாம்பரத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
பின்னர், கணக்காளர் ஏகாம்பரத்திடம் சிவக்குமார் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எடுத்துக் கூறி, லஞ்சப் பணத்தைக் குறைக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, ஏகாமபரம் ரூ 15ஆயிரமாக குறைத்துள்ளார்.
» நகைக்கடன் வட்டி மட்டும் செலுத்தி புதுப்பிக்கும் முறை தொடர வேண்டும் - சேலம் விவசாயிகள் வலியுறுத்தல்
» மார்ச் 31-ம் தேதி ஈரோடு- செங்கோட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம்
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய பணத்தை சிவகுமாரிடம் கொடுத்து, திருவள்ளூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் செயலாளர் ராமலிங்கம் மற்றும் கணக்காளர் ஏகாம்பரத்திடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பணம் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.