மேட்டூர்: மேட்டூர் அடுத்த பாலமலையில் 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை மதுவிலக்கு போலீஸார் அழித்து, 2 பேரை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பாலமலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பது குறித்து மதுவிலக்கு போலீஸார் அடிக்கடி சோதனை செய்வது வழக்கம். அதன்படி, பாலமலையில் உள்ள வனப்பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பதாக மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேட்டூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்ஐ ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் வனப்பகுதிக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா? சாராய ஊறல் போடப்பட்டு இருக்கிறதா? என சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், வனப்பகுதியில் உள்ள நீரோடை பகுதியில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பாலமலையில் இன்று போலீஸார் சோதனை நடத்தினர். இச்சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சோதனையில் வனப்பகுதியில் 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் 4 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றியும் மற்றும் கள்ளச்சாராய செட் பாத்திரங்களை சம்பவ இடத்திலே அழித்தனர்.
» கொடைக்கானல் விடுதி உரிமையாளர் கொலை: மதுரை சிறுவன் உட்பட 4 பேர் கைது - காரணம் என்ன?
» டாஸ்மாக் கடையில் தகராறு; உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் கொலை - நடந்தது என்ன?
தொடர்ந்து, கள்ளச்சாராயம் ஊறல் போட்ட, பாலமலை அடுத்த சந்தனபள்ளிகாடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (40) மற்றும் இளையராஜா (39) என்பவர் மீது மேட்டூர் மதுவிலக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.