7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மதுரை எஸ்பி அலுவலக ஊழியருக்கு 30 ஆண்டுகள் சிறை

By KU BUREAU

மதுரை: போக்சோ வழக்கில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஊழியருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காரைக்குடியைச் சேர்ந்தவர் பாலாஜி (44). இவர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக (அமைச்சு பணியாளர்) பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்தபோது 7 வயது சிறுமியை போலி துப்பாக்கியை காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்தார். இது குறித்து 2021ம் ஆண்டு சிறுமியின் தாயார் புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து பாலாஜியை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட பாலாஜிக்கு சிறுமியை மிரட்டிய குற்றத்துக்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.2,000 அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.25,000 அபராதமும், பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக 30 ஆண்டுகள் சிறை, ரூ.25,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார் .

மேலும் அபராதத் தொகையில் ரூ.46,000-ஐ பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும், அதனுடன் சேர்த்து அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு கொடுக்கவும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE