வருவாய்த் துறை வைத்த சீலை அகற்றி நித்தியானந்தா மடத்துக்குள் சென்ற 2 சீடர்கள் கைது: ராஜபாளையம் பரபரப்பு

By KU BUREAU

விருதுநகர்: ராஜபாளையம் அருகே சேத்தூரில் நித்தியானந்தா மடத்துக்கு வைத்த சீலை அகற்றி உள்ளே சென்ற 2 சீடர்களை, போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் கோதை நாச்சியாபுரம் மற்றும் சேத்தூர் பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலங்கள், பரமஹம்ச நித்தியானந்தர் தியானப் பீடத்துக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்த இரு இடங்களிலும் ஆசிரமம் கட்டப்பட்டு, நித்தியானந்தா சீடர்கள் மற்றும் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். நித்தியானந்தா தொடர்பான சர்ச்சை வெளியானதை அடுத்து, தான பத்திரப் பதிவை ரத்து செய்யக் கோரி, தானமாக வழங்கிய நபர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், அந்த இடத்தில் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்களை வெளியேற்றி, ஆசிரமத்துக் கு சீல் வைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சீலை உடைத்து ஆசிரமத்துக்குள் சீடர்கள் சென்றனர். இது குறித்து வருவாய்த் துறையினர் அளித்த புகாரில், சேத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆசிரமத்தின் சீலை உடைத்து உள்ளே இருந்த இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE